களுதாவளை துப்பாக்கிசூட்டை கண்டித்து கிரான்குளத்தில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு களுதாவளை பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்தும் நீதிவிசாரணை கோரியும் கிரான்குளத்தில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (26)மட்டக்களப்பு கிரான்குளம் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கிரான்குளம் வி~;ணு ஆலயத்திற்கு முன்பாக இப்போராட்டம் நடைபெற்றது.

கடந்த 22ஆம் திகதி களுதாவளை பகுதியிலுள்ள குறித்த பிரதிப் பணிப்பாளரின் வீட்டிற்குச் சென்ற இரண்டு ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பிரதிப்பணிப்பாளர் விமல்ராஜ் அவர்கள் படுகாயமடைந்த நிலையில் தற்பொழுது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கண்டனப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

கிரான்குளத்தில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்படும் இவ்வாறான தாக்குதல்களுக்கு  கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் தாக்குதல்தாரிகளை கைது செய்யுமாறும் வலியுறுத்தப்பட்டது.

நல்லாட்சி அரசே கொலைவெறியாளர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்து,ஜனாதிபதி அவர்களே இச்சூட்டு சம்பவம் கிடப்பில் போடப்படுமா?,ஐந்து நாட்கள் கடந்துவிட்டன குற்றவாளிகள் கண்டுபிடிக்கபடமாட்டார்களா?,,போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டதுடன் கிழக்கு மாகாணசபை, பாராளுமுன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.