போராட்டத்தில் இணைத்துக்கொண்டவர்கள் மத்திய கிழக்கில் பல்வேறு கஸ்டங்களில் -ஜனா

யுத்த காலத்தில் போராட்ட இயக்கங்களுக்குள் தங்களை இணைத்துக்கொண்டவர்கள் தமது கல்வித்தகைமையை பூர்த்திசெய்யமுடியாத காரணத்தினால் தொழில்வாய்ப்புகளை இழந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று மிகவும் கஸ்டங்களை எதிர்கொண்டுவருவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட தம்பலவத்தை பகுதியில் உள்ள இளைஞர்களின் நன்மை கருதி நீர்க்குழாய் பொருத்துததல் பயிற்சி நெறியை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அனுசரனையுடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இந்த பயிற்சி நெறியை ஆரம்பித்துள்ளது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் போரதீவுப்பற்று பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.நடராஜா மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.என்.எம்.நைரூஸ்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கடந்த காலத்தை போல் இல்லாமல் இன்று அரசாங்க தொழில்பெறவேண்டுமானால் கல்வியில் உள்ள போட்டித்தன்மையில் நாங்கள் வெற்றிபெறவேண்டிய நிலையுள்ளது.

சுமார் ஐம்பது வருடத்திற்கு முன்னர் சாதாரணதரம் கற்றால் ஆசிரியர் தொழிலைப்பெறக்கூடிய நிலையிருந்தது.ஆனால் தற்போது பட்டம்பெற்றால் கூட போட்டிப்பரீட்சையில் வெற்றிபெறவேண்டும்.ஆககுறைந்த மட்ட அரச தொழிலைப்பெற்றுக்கொள்வது என்றாலும் சாதாரண தரத்தில் ஆறு பாடங்கள் சித்திபெறவேண்டும் என்பதுடன் அவற்றில் இரண்டு பாடங்களில் சிறப்பு சித்திபெறவேண்டும்.அப்போதுதான் அரசாங்கத்தில் வடிகான் துப்புரவுசெய்யும் தொழிலைப்பெற்றுக்கொள்ளமுடியும்.

மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு வாவியினால் இரண்டாக பிரிக்கப்பட்டு எழுவான் கரையெனவும் படுவான்கரையெனவும் உள்ளது.அதில் எழுவான் கரை ஓரளவுக்கு சகல துறைகளிலும் அபிவிருத்தி கண்டுள்ளது.படுவான்கரை பிரதேசம் கடந்த கால யுத்ததினால் பாதிக்கப்பட்ட மிகவும் மோசமான பிரதேசமாகஇருப்பதுடன் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது.

படுவான்கரை பகுதிகளில் கடந்த கால யுத்தம் காரணமாக தமது கல்வி நிலையை இழந்த இளைஞர் யுவதிகள் தமது வாழ்வினை கொண்டுசெல்வதில் பலத்த சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.யுத்த காலத்தில் போராட்ட இயக்கங்களுக்குள் தங்களை இணைத்துக்கொண்டவர்கள் தமது கல்வித்தகைமையை பூர்த்திசெய்யமுடியாத காரணத்தினால் தொழில்வாய்ப்புகளை இழந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று மிகவும் கஸ்டங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே இவ்வாறான தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தும் நீர்க்குழாய் பொருத்தும் பாடநெறிகள் சிறந்த திட்டம் என கருதமுடியும்.20 இளைஞர்கள் இந்த பயிற்சி நெறிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.இதன்மூலம் அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஒளிமயமான வாழ்க்கை ஏற்படும்.இதற்கு ஒத்துழைப்பினை வழங்கிய தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவி பணிப்பாளர் நைரூஸ{க்கு எனது மனமார்ந்த நன்றிகள்.