ஒரு மாத காலத்தில் மட்டக்களப்பில் சட்ட விரோத போதை விற்பனை, இரண்டுஇலட்சத்து 41ஆயிரம் தண்டம்-பொறுப்பதிகாரி தங்கராஜா

மட்டக்களப்பு மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இரண்டு இலட்சத்து 41ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிம் சட்ட விரோத போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையை ஒழிக்கும் வகையில் மதுவரித்திணைக்களம் பல்வேறு நடவடிக்கையினை கடந்த ஒரு மாதமாக மேற்கொண்டுவந்தது.
இதனடிப்படையில் கேரளா கஞ்சாவிற்பனை செய்தவர்கள், வெளிநாட்டு மதுபானங்களை சட்ட விரோதமாக விற்றவர்கள்,வடிசாராயம் விற்றவர்கள்,வயது குறைந்தவர்களுக்கு சிகரட் விற்றவர்கள் என 99பேருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவர்களில் 58பேருக்கு நீதிமன்றங்கள் ஊடாக இரண்டு இலட்சத்து 41ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதுடன் 41பேருக்கான வழக்குகள் தாக்கல்செய்வதற்கான நடடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு –அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சர் என்.சுசாதரனின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தலைமையில் மதுவரித்திணைக்கள பரிசோதகர் பி.செல்வகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தனர்.

தொடர்ந்து இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி தெரிவித்தார்.