மட்டக்களப்பு பொலிஸாரின் மனு நீதிமன்றினால் நிராகரிப்பு

மட்டக்களப்பில் மட்டக்களப்பு மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியம் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவற்றினை தடுத்துநிறுத்துமாறும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்ட மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படாமல் அமைதியான முறையில் ஊர்வலம் செல்லவும் ஆர்ப்பாட்டம் நடாத்தவும் அனைவருக்கும் உரிமையுள்ளது எனவு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பான மனு நேற்று மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தினால் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் பிரகாரம் மட்டக்களப்பு இந்துக்குருமார் ஒன்றிய உறுப்பினர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜராகினர்.
இதன்போது இந்துக்குருமார் ஒன்றியத்தின் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.பிரேம்நாத் ஆஜராகியதுடன் வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றன.

மட்டக்களப்பு நகரில் மங்கலராம விகாராதிபதியினால் நீதிமன்றத்தின் கட்டளையினை மீறி ஆர்ப்பாட்;டம் நடாத்தப்பட்டதாகவும் அதற்கு எதிராக பொலிஸார் அச்சந்தர்ப்பத்தில் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் சட்டத்தரணி கே.பிரேம்நாத் சுட்டிக்காட்டினார்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடாத்தவோ,ஊர்வலம் நடாத்தவோ மட்டக்களப்பு மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியத்திற்கு உரிமையுள்ளது என்பதையும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது இன்று புதன்கிழமையோ நாளை வியாழக்கிழமையோ தாங்கல் எந்தவித ஊர்வலத்தையோ ஆர்ப்பாட்டத்தையோ நடாத்தும் முயற்சியை மேற்கொள்ளவில்லையென மட்டக்களப்பு மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியத்தினால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை இன்று மட்டக்களப்பு நகரில் பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் மட்டக்களப்பு மங்கலராம விகாரையை சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் நகரின் நுழைவாயில் உட்பட பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நகரில் மங்கலராம விகாராதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளதாக வெளியான தகவல்களை தொடர்ந்தே இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதேநேரம் மங்கலராம விகாராதிபதிக்கு நீதிமன்ற ஆணையை மீறியமை தொடர்பில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் அழைப்பானை அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.