மட்டு.முன்னாள் மேயர் உட்பட நால்வருக்கும் பிணை

மட்டக்களப்பு நகரிலுள்ள கட்டிடமொன்றில் விபச்சார விடுதி தொடர்பான  குற்றச்சாட்டின் பேரில்  போலிஸாரால்  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்  வைக்கப்பட்டிருந்த  மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் சிவகீத்தா பிரபாகரன் உட்பட நான்கு  சந்தேக நபர்களுக்கும்  நிபந்தனைகளின் பேரில் இன்று நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்  மீண்டும்   பொலிஸாரால்  ஆஜர்படுத்திய போது  நீதிபதி எம். கணேசராஜா பிணையில் செல்ல அனுமதி வழங்கும் உத்தரவை பிறப்பித்தார்.

தலா  ரூபா 20 ஆயிரம் ரொக்கம் , மற்றும்  ரூபா 2 இலட்சம் பெறுமதியான  இருவரின்  சரீர பிணையிலும்  செல்ல  நீதிமன்றம்  அனுமதி வழங்கியுள்ளது.

பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டக்களப்பு போலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி  ஓப்பமிட வேண்டும் . எதிர்வரும் 5ம் திகதி மீண்டும்  நீதிமன்றத்தில்  ஆஜராக வேண்டும்  என்றும் மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்..

மட்டக்களப்பு நகரிலுள்ள  சிவகீத்தா பிரபாகரனின் வீட்டுடன் இணைந்த  இணைந்த கட்டிடத்தில் வெளியார் தங்குவதற்கான அறைகள் வாடகைக்கு விடப்படுகின்றது.

அந்த கட்டிடத்தில் பாலியல்  தொழில் நிமித்தம் ஆட்கள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அந்த கட்டிடம் ஒக்டோபர் மாதம் 23ம் திகதி பொலிஸாரால் சோதனையிடப்பட்டது

சந்தேகத்திற்கிடமான முறையில்  தங்கியிருந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்ட தோடு சில தடயங்களும் போலிஸாரால் மீட்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து சிவகீத்தா பிரபாகரன் , அவரது வீட்டு உதவியாளர் மற்றும் இரு பெண்களும் சந்தேகத்தின் பேரில்  கைதாகி நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.