'சோதனைச் சாவடி, கோயில், கிறிஸ்தவ தேவாயலம் மற்றும் மசூதி" ஆய்வு நூல் வெளியீடு

 (லியோன்)

இலங்கையின் கிழக்கு மாகாணத்தினை அடிப்படையாகக் கொண்டு ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட 'சோதனைச் சாவடி, கோயில், கிறிஸ்தவ தேவாயலம் மற்றும் மசூதி" என்கிற யுத்தம் மற்றும் சமாதானம் தொடர்பான ஒன்றிணைந்த மானுடவியல் ஆய்வு நூல்  செவ்வாய்க்கிழமை (06)   கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது .


கிழக்கு மாகாணத்தில் 2006 முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த நூல் 2014ஆம் ஆண்டு லண்டனில் வெளியிடப்பட்டு பின்னர் ஐரோப்பிய நாடுகளில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டது.
'
சோதனைச் சாவடி, கோயில், கிறிஸ்தவ தேவாயலம் மற்றும் மசூதி" நூல் லண்டன் புலிரோ அச்சகம் மற்றும் இலங்கை சமூக விஞ்ஞானிகள் அமைப்பு ஆகியன இணைந்து வெளியிடப்பட்டதாகும்.

இலங்கைக்கான வெளியீடு  செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நல்லையா மண்டபத்தில் பிரதி உப வேந்தர் வைத்திய கலாநிதி ஏ.ஈ.கருணாகரன் தலைமையில் வெளியிட்டு வைக்கப்பட்டதாக   ஏற்பாட்டாளரும் கிழக்குப் பல்கலைக்கழக புவியியல்துறைத் தலைவருமான கலாநிதி எம்.வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.

யுத்தகாலத்தில் இடம்பெற்ற விடயங்களை வெளிக்கொணரும் வகையில் அமைந்த இந்த ஆய்வில் எடின்பர்க்கிலுள்ள தென்ஆசிய பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறை பேராசிரியர் ஜொனதன்
ஸ்பென்சர், லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜொனதன் குட்கன்ட்,  பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல்  துறைப் பேராசிரியர் சாகுல் கஸ்புல்லா, சூரிச் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை விரிவுரையாளர் பார்ட் க்லெம், சூரிச் பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் பெனடிக் கோர்ப், பேராதனை பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் கலிங்கா டியூடர் சில்வா அத்துடன் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பங்கு கொண்டுள்ளனர்.

இந்த நூல் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி ஆண்டுகளில்  சோதனைச் சாவடி, கோயில், கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் மசூதி மிகவும் மதரீதியாக வேறுபட்டிருக்கிறது மற்றும் அரசியல் பதற்றமான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வை அடிப்படையாக கொண்டது. 

சோதனைச் சாவடி, கோயில், கிறிஸ்தவ தேவாயலம் மற்றும் மசூதி ஆகிய இடங்களில் மக்கள் எதிர் கொண்ட இன்னல்கள் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்த நூல் பல்வேறு விடயங்களை வெளிக் கொணருகிறது. 

சிவில் சமூகத்தின் வாக்குறுதி பற்றி புதிய மற்றும் ஆத்திரமூட்டும் வாதங்கள், மற்றும் மோதல் மத்தியஸ்த பலம், மத அமைப்புக்கள் பலவீனங்கள், மதத் தலைவர்களது செயற்பாடுகளின் தேவை, ஒரு மத அடிப்படையிலான  தொடர் செயற்பாடுகள் குறித்தும் விளக்குகிறது. நீண்ட மற்றும் வன்முறை மோதல்களில் சிக்கி ஆறுதல்படுத்தவும், நிலைப்படுத்தவும் மக்களுக்கு மதம் எவ்வளவுக்கு முன்னிற்க வேண்டும். வன்முறைக்காலங்களில் மத நிறுவனங்கள் எவ்வாறு  ஆழமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பது பற்றியெல்லாம் ஆராய்கிறது.

இந்த புத்தகம் தீவிர மோதல் சூழ்நிலைகளில் மத நிறுவனங்கள் தலைவர்களின் பங்கு பற்றி புதிய விவாதத்திற்கு தூண்டுவதுடன், மானுடவியல் மாணவர்கள், வளர்ச்சி ஆய்வுகள், மதக் கல்வி, அமைதி, மோதல் ஆய்வுகளுக்கும் பெரும் உதவிகளை நல்கக்கூடியதாகும். 


இந்த வெளியீட்டு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில், சமூகம் சார் செயற்பாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஆர்வலர்கள், புத்திஜீவிகள்  என பலர் கலந்துகொண்டனர்