மட்டக்களப்பில் பெண்கள் மற்றும் சிறுமியர்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு 16நாள் வேலைத்திட்டங்கள்

பெண்கள் மற்றும் சிறுமியர்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு செயல்வாதம் 16நாள் வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.


சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் கிழக்கு சமூக அபிவிருத்தி மையமும் இணைந்து பெடம் இன்டர்சனல் பிரான்ஸ் அமைப்பின் அனுசரணையுடன் இது தொடர்பான நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.

இது தொடர்பான நிகழ்வு நேற்று திங்கட்கிழமை காலை தொடக்கம் மாலை வரையில் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்த மாவட்ட இணைப்பாளர் திருமதி எஸ்.அருணாளினி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏறாவூர் நகர உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.ஏ.சி.றமீஸா, பெடம் இன்டர்சனல் பிரான்ஸ் அமைப்பின் நிகழ்ச்சி திட்டமுகாமையாளர் செல்வி எல்டா றிவோட்,சமூகசேவையாளரும் உளவளத்துனையாளருமான பிர்தௌஸ் நளீமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பெண்கள்,சிறுமிகளுக்கு எதிரான வீட்டு வன்முறைகளை ஒழிப்பதற்காக ஆண்களை வலுவூட்டும் வகையிலும் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது சமூகத்தில் பெண்கள் ,சிறுமியர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,வீட்டு வன்முறைகள் ஏற்படுவதற்கான அடிப்படை காரணங்கள் தொடர்பில் கருத்துரைகள் வழங்கப்பட்டன.