இலங்கையின் பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழி –மட்டக்களப்பில் பொலிஸ்மா அதிபர் அதிரடி அறிவிப்பு

இலங்கையின் சகல பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழியில் விசாரணைசெய்வதற்கும் முறைப்பாட்டினை பதிவுசெய்வதற்குமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொலிஸ் திணைக்களத்தின் 150வது ஆண்டு நிறைவு தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டில் இன்று தேசியவாதம் இல்லை. தீவிரவாதம் இல்லை. பிரிவினைவாதம் இல்லை. வடக்கு கிழக்கு மக்கள் உட்பட ஏனைய மாகாண மக்களும் இதைத்தான் விரும்பினார்கள். நாட்டில் இன்று கடுமையான சட்ட ஒழுங்குகள் காணப்படுகின்றன. பொலிஸ் திணைக்களம் நாளுக்குநாள் பலத்த சவால்களை எதிர்நோக்கி வருகின்றது. நாம் உங்களுக்காக அச்சவால்களுக்கு மிக எளிமையான, உணர்வுபூர்வமான, நெகிழ்வான. நேரடியான சில சமயங்களில் வெளிப்படையான முறையில் முகங்கொடுத்து வருகின்றோம். உங்களையும் உங்களுடைய சொத்துகளையும் பாதுகாப்பது எங்களுடைய கடமையாகும். அதன் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதும் எமது கடமையாகும்.

பொலிஸாரின் வெற்றி மக்களின் ஒத்துழைப்பில் தங்கியுள்ளது. அதற்காக சிவில் பாதுகாப்புக் குழுவில் சில மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானித்திருக்கின்றேன். மக்களின் வாழ்க்கையில் தொடர்ந்தும் நிலைத்திருக்கக்கூடிய மிகவும் அவசியமான விடயங்களை அறிமுகப்படுத்தவிருக்கின்றேன். அதற்காக வடமாகாணம், கிழக்குமாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம், மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம் போன்ற மாகாணங்களில் எமது திட்டத்தினை அறிமுகப்படுத்த தீர்மானித்திருக்கின்றேன்.

சமயஅனுஷ்டானங்கள், கலாசாரம், சுகாதாரம், கல்வி, விளையாட்டு போன்ற விடயங்கள் தொடர்பாக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்களின் உதவியுடன் ஏற்கனவே மக்களுக்கு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டு அவை தொடர்பான விளக்கங்களும் விழிப்பூட்டல்களும் அளிக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட மாகாணங்களில் சில பகுதிகளில் 467 பொலிஸ் நியைங்களில் ஆகக்கூடியதான 50கிராமசேவையாளர் பிரிவுகளில் கடந்த மாதம் 30ஆந்திகதி இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டமானது தனித்து சிங்களவருக்கோ தமிழருக்கோ முஸ்லிம்களுக்கோ உரியதல்ல. நாட்டிற்கான ஒற்றுமைக்கான வேலைத்திட்டமாகும். நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் இந்நாட்டில் மீண்டும் தீவிரவாதமும் பிரிவினைவாதமும் ஏற்படாது.

நாம் தெரிவு செய்துள்ள சமயஅனுஷ்டானங்கள், கலாசாரம், சுகாதாரம், கல்வி, விளையாட்டு ஆகிய ஆறு விடயங்களும் ஒருபோதும் ரூபாய்களால் அளவிட முடியாதவை. வரும் நாட்களில் கலாசார விழாக்கள், நடன போட்டிகள்,இசை நிகழ்சிகள், பரிசளிப்பு விழாக்கள் என்பன நடைபெறவிருக்கின்றன. அனைத்து மக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க முடியும். பொலிஸ்தினத்தை முன்னிட்டு தற்காலிகமாக அமைக்கப்பட்ட பொலிஸ் காவலரண்கள் யாவும் அகற்றப்படவிருக்கின்றன.சிவில் பாதுகாப்புக் குழுவிற்கும் பொதுமக்களுக்குமிடையே நல்லதொரு உறவினை கட்டியெழுப்ப முடியும். இதன் மூலமாக தேசிய பாதுகாப்பினை உறுதி செய்ய முடியும்.

இந்த ஆண்டில் 70வீதமான குற்றச் செயல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவையனைத்தும் இந்த ஆண்டின் இறுதிக்குள் முற்றாக தீர்த்துவைக்கப்படும். அத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஒவ்வொருநாளும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்கள், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், தேவைப்படுமிடத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களையும் கண்காணித்து உரிய பணிப்புரைகளை வழங்கி வருகின்றேன்.

வரும் நாட்களில் பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை 600ஆக உயர்த்தப்படவிருக்கின்றன. தமிழ் பேசும் பொலிஸாரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதன் காரணமாக 25சதவீதம் தமிழ் பேசும் பொலிஸாரை சேவையில் இணைத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கின்றோம்.

அவர்கள் மொழி உதவிப் பிரிவில் இணைத்துக்கொள்ளப்படவிருக்கின்றனர். வடக்குகிழக்கு, மலையகத்திலுள்ள தமிழ் பேசும் இளைஞர் யுவதிகள் ஆங்கிலம் தெரிந்தவர்கள் பொலிஸ் தலைமையகத்தில் அமைக்கப்படவிருக்கின்ற மொழி உதவிப் பிரிவிற்கு உதவிகளை வழங்க முடியும். பொது மக்கள் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தரும்போது தமக்குத் தெரிந்த மொழியில் உரையாடுவதற்கு மொழி உதவிப் பிரிவு உதவி புரியும். தமக்குத் தெரிந்த மொழியில் தொலைபேசி மூலமாகவும் குறுஞ்செய்திகள் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் பொலிஸாருடன் தொடர்புகொண்டு அதே மொழியில் உரிய பதில்களையும் உதவிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இளைஞர்கள், முதியவர்கள்,பாடசாலை மாணவர்கள், அரச பணியாளர்கள்,அரசசார்பற்ற நிறுவன ஊழியர்கள்,அரச அதிபர்கள்,கிராம சேவையாளர்கள் அனைவரும் நாம் பொதுமக்களை இலகுவாக சென்றடைய உதவி புரிய வேண்டும். உங்களுடைய செயற்பாடுகள் நாங்கள் வினைத்திறனுடன் கடமையாற்றுவதற்கு உதவியாக இருக்க வேண்டும். பொலிஸார் உங்களுக்காகவே கடமையாற்றுகின்றனர்.