மட்டக்களப்பில் கிளர்ந்தெழுந்த இந்துக்குருமார் –பிக்குவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கலரத்ன தேரரின் செயற்பாட்டினை கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியத்தினால் செங்கலடியில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி இன்று செவ்வாய்க்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.

செங்கலடி இலங்கை வங்கிக்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமாகி செங்கலடி-பதுளை வீதி சந்தி வரை சென்று அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.

அண்மையில் பன்குடாவெளியில் உள்ள இந்துக்குருமார் ஒருவரின் காணிக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு புத்தர் சிலையொன்றை வைக்க முனைந்ததுடன் இந்துக்குருவையும் தகாத வார்த்தைகளினால் பேசியுள்ளார்.

இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் இவ்வாறான பௌத்த பிக்குகளுக்கு எதிராக உரியவர்கள் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள்,இந்துக்குருமார் ,இந்து மத அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் கண்டன பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்ட நிறைவில் ஜனாதிபதி மற்றும் பிரதமர்,மதவிவகார அமைச்சு ஆகியோருக்கான மகஜர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டன.