வவுணதீவு பிரதேசம் எப்போது நகரமாவது.

(சசி துறையூர்) 

இளைஞர்களே நமது வவுணதீவு பிரதேசம் எப்போது நகரமாவது இந்த பிரதேசத்தில் ஒரு கிராமத்திலேனும் அதற்கான ஆரம்பத்தை காணமுடியவில்லை, முறையான தேநீர் கடை கூட இங்கில்லை. அருகில் உள்ள பட்டிப்பளை நகரமாகிவிட்டது.  நீங்கள் அதாவது இளைஞர்கள்  நினைத்தால் முயற்சித்தால் நிலை மாறும், மாற்றலாம் என கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உரை.


 மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான பிரதேச இளைஞர் முகாமில் பயிற்சியை பூர்த்தி செய்த பங்கு பற்றுனர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 06,11,2016 ஞாயிறு மாலை குறிஞ்சாமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உரையாற்றினார்.

அவர் தனதுரையில் தொடர்ந்து இன்றைய இளைஞர்களின் எதிர் பார்ப்பும் விருப்பமும் நவீன ரக கையடக்க தொலைபேசியும், ஒரு மோட்டார் சைக்கிலுமாகத்தான் இருக்கிறது. அன்பான இளைஞர்களே அதுவல்ல வாழ்க்கை, கடந்த கால நிகழ்கால வரலாற்றில் வாழ்க்கையை வெற்றி கொண்டவர்களது வாழ்க்கையை அவர்களது சரிதங்களை தேடிப் படியுங்கள் முன்னுதாரணமாக எடுத்துகொண்டு நமது வாழ்க்கையை முன்கொண்டு செல்ல வேண்டும். அதற்கு நீங்கள் வாசிப்பு பழக்கம் உள்ளவர்களாக மாற வேண்டும்.

நான் ஒரு நபருடைய கதை சொல்கிறேன். ஆனால் பெயர் சொல்ல மாட்டேன். நபரை குறிப்பிடவும் மாட்டேன். நீங்கள் கண்டு பிடிக்க வேண்டும். சிறுவனாக 1976 ம் வருடம் வடக்கில் இருந்து தன்னந்தனியாக யாரையும் தெரியாது யாரும் அறிமுகம் இல்லாது மட்டக்களப்புக்கு வந்து இன்று தனது சகோதரர்களுடன் பல வியாபார நிலையங்களுக்கும், சொத்துக்களுக்கும் அதிபதியாக உள்ளார் ஒருவர். இது அவரது அயராத விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் தான். இவர் 7ம் வகுப்பு மாத்திரம் தான் படித்தார்.

ஆரம்பத்தில் தனக்கு சிங்களம் தெரிந்ததால் சிறைச்சாலைக்கு மரக்கறி மாட்டிறைச்சி விநியோகம் செய்தார் அதிலிருந்து வருமானம் பெற்று சிறிய பெட்டிக் கடைக்கு சொந்தக்காரனார். இந்த நிலையில் 1978ம் வருடம் ஏற்பட்ட சூறாவளி பாதிப்பினால் தனது கடை முற்றாக பாதிப்படைந்து அதிக நஸ்டமடைந்த போதும் பின் வாங்காது தொடர் முயற்சியால் படிப்படியாக முன்னோறினார்.

என் அருமை இளைஞர்களே சிந்தித்து பாருங்கள் இவருடைய முன்னேற்றம் எவ்வாறு அமைந்திருக்கின்றது. ஏன் எங்ளால் முடியாது.

முடியாது நடக்காது என்ற வார்த்தைகள் முட்டாளின் அகராதியில் இடம்பெற வேண்டியவை என்கிறார் மாவீரன் நெப்போலியன். எனவே முடியும் என்ற நம்பிக்கையுடன் முறையாக திட்டமிடுங்கள் ஒவ்வொரு பத்து ஆண்டுக்கும் எமது இலக்கு எவ்வாறு இருக்க வேண்டும் அதனை எவ்வாறு  அடைய முடியும் என்று சிந்தியுங்கள் முயற்சியுங்கள்.

தாய் தந்தையரின் கனவுகளை மெய்ப்பியுங்கள் அவர்களிற்கு உண்மையாக இருங்கள். சாதரண படகோட்டியின் மகன் டாக்டர் அப்துல்கலாம். சிறுவனாக இருந்த போது ஒரு நாள் தாயின் மடியில் தூங்கினார் அப்போது தாயின் கண்ணீர் தனது முகத்தில் சிந்தியது கண்விழித்து தாயிடம் காராணம் கேட்டார், தாய் கண்ணீர் ததும்ப உங்களை நான்  வளர்த்து ஆளாக்குவது எப்படி என ஏங்கினார். தாயின் ஏக்கத்தை உணர்ந்தார் தாய் தந்தையரின் ஏக்கம் அவரை ஊக்குவித்தது. பிற் காலத்தில் அவர் எப்படி ஆளானார் என்பதை நீங்கள் என்னைவிட நன்கறிவீர்கள்.

இளைஞர்களே எல்லோரும் அரச தொழில் பார்க்கவேண்டும் கிடைக்கவேண்டும் என எண்ணிவிடாதீர்கள். அரச உத்தியோகஸ்தர்கள் தான் இன்று வசதி குறைந்தவர்களாக உள்ளனர். நீங்கள் சுயதொழில், கைத்தொழிலை கற்றுக்கொள்ளுங்கள் அதுவும் காலத்துக்கு ஏற்ற பயிற்சி நெறிகளை பயின்று கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு தொழில் வழங்கும் நிலைக்கு வருவீர்கள். அதற்கு தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள். கல்வி ஒன்றே உங்களையும் சமூகத்தையும் மாற்றியமைக்க கூடியது  நெல்சன் மன்டேலா கூறியது.

 இறுதியாக கூறுகிறேன் புகைத்தலை தவிருங்கள் மதுவை நாடாதீர்கள் நட்புடன் எல்லோருடனும் சமமாக பழகுங்கள் சகோதர இனங்களையும் மதங்களையும் மதிக்கவும் நேசிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள். அதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இது போன்ற இளைஞர் முகாம்களும் நல்ல களம் அந்த வகையில் இளைஞர் சேவைகள் மன்றத்துக்கும் அதன் உத்தியோகஸ்தர்களுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுக்களும். என பாராளுமன்ற உறுப்பினர் தமதுரையில் குறிப்பிட்டார்.