மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லவிருந்த பழுதடைந்த பெருமளவான பொருட்கள் மீட்பு

(லியோன்)

மட்டக்களப்பு  சிறைச்சாலைக்கு உணவுக்காக விநியோகிக்கப்படவிருந்த பெருமளவான பழுதடைந்த பொருட்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அழிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு  சிறைச்சாலைக்கு உணவுக்காக விநியோகிக்கப்பட்ட 35 அரிசி மூடைகள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு பொது சுகாதார  வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கிடைக்கப்பட்ட தகவலுக்கு அமைய மட்டக்களப்பு பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்  அச்சுதன் மற்றும் வைத்தியர்  கிரிசுதன் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்களான  எஸ் . அமுதபாலன் , கே .ஜெய்சங்கர் , வி .சி . சகாதேவன் குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்  போது  சிறைச்சாலைக்கு உணவுக்காக பொருட்களை விநியோகிக்கும் களஞ்சியசாலையினை பரிசோதனை செய்யப்பட போது குறித்த களஞ்சியசாலையில்  மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற  நிலையில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன .

குறித்த களஞ்சியசாலையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற  நிலையில் விநியோகத்திற்காக வைக்கப்பட்டிருந்த 340 மூடைகளில் இருந்த 17000 கிலோ அரிசி , 20 கிலோ கோவா , 20 கிலோ கத்தரிக்காய் , 80 கிலோ பீட்ருட் கிழங்கு , 40 கிலோ செத்தல் மிளகாய் , 26  கிலோ கொத்தமல்லி ,  25 கிலோ பருப்பு . 200 கிலோ மீன் போன்ற பொருட்கள் பழுதடைந்த நிலையில் களஞ்சியசாலையில் இருந்து மீட்கப்பட்டதாக புளியந்தீவு பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் பின் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக   கைப்பற்றப்பட்ட பொருட்கள் இன்று மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டதுடன் களஞ்சிய உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

குறித்த வழக்கு தொடர்பாக  விசாரணை செய்த  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா களஞ்சியசாலை  உரிமையாளருக்கு எதிரா 6000 ரூபா தண்ட பணம் விதிக்கப்பட்டதுடன் குறித்த பொருட்கள் அனைத்தையும் அளிக்குமாறும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனடிப்படையில் பொருட்கள் அனைத்தும் நேற்று புதன்கிழமை மாலை திருப்பெருந்துறை குப்பைகொட்டும் இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அழிக்கப்பட்டதாக பொதுச்சுகாதார பரிசோதகர் அமுதமாலன் மேலும் தெரிவித்தார்.