அரசியலில் தங்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துமாறு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

இலங்கை தேர்தல் முறைமை சீரமைக்கப்பட்டு பல்வேறு சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் தமது பிரதிநிதித்துவம் அரசியலில் உறுதிப்படுத்தப்படவேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த காலத்தில் தாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் நிலையிலும் தமக்கான பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு செல்லாத காரணத்தினால் தமது பிரச்சினைகள் தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படுவதில்லையெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளின் அரசியல் உரிமைகளையும் அவர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்குமாறு கோரும் விசேட கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் நேற்று நடைபெற்றது.

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் ஹமிட் அமைப்பு என்பன இணைந்து அமெரிக்க அபிவிருத்தி திட்ட (யு.எஸ்.எயிட்)உதவியுடன் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறாளிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளருமான கி.துரைராஜசிங்கம்,கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளரும் டெலோவின் உறுப்பினருமான பிரசன்னா இந்திரகுமார் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஞா.கிருஸணபிள்ளை மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீ வழங்கப்படவேண்டிய அவசியம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன் மாற்றுத்திறனாளிகள் அரசியலுக்குள் உள்வாங்கப்படவேண்டிய அவசியம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு கருத்துகள் இங்கு முன்வைக்கப்பட்டன.

இதன்போது அனைவருக்குமான நீடித்து நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கு முழுமையான செயல்திறனான மாற்றுத்திறனாளிகளின் அரசியல் பங்களிப்பினை நாம் மேம்படுத்துவோம் என்னும் உறுதிமொழியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கையொப்பமிட்டனர்.