மட்டக்களப்பில் சட்டவிரோத மீன்பிடியாளர்கள் கைது –வலைகளும் மீட்பு

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் வாவிப்பகுதியில் சட்ட விரோத வலைகளைப்பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஆறு பேரை இன்று வியாக்கிழமை காலை(17)மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளடன் அவர்களிடம் இருந்து பெருமளவு வலைகளையும் மீட்டுள்ளனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள வாவிப்பகுதியில் சட்ட விரோத வலைகள் பாவித்து மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் மீன்பிடித்திணைக்கள அதிகாரிகள் இவர்களை கைதுசெய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் ருக்ஸன் குரூஸின் ஆலோசனைக்கு அமைவாக கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் கடற்தொழில் பரிசோதகர் த.பாலமுகுந்தன் தலைமையிலான குழுவினர் இவர்களை கைதுசெய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான சட்ட விரோத வலைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் சுமார் 50கிலோ மீன்களும் மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் கடற்தொழில் பரிசோதகர் த.பாலமுகுந்தன் தெரிவித்தார்.

கடற்பகுதிகளில் பயன்படுத்தும் வலைகளை சட்ட விரோதமான முறையில் வாவிகளுக்குள் பாவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவர்களை இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவியில் சட்ட விரோத வலைகளைப்பாவித்து மீன்பிடியில் ஈடுபடுவோர் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை மாவட்ட கடற்தொழில் மீன்பிடித்திணைக்களம் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.