அந்நியரிடம் இருந்து நாட்டை காக்க இராணுவத்தில் இணையவிருந்தார் சுவாமி விபுலானந்த அடிகளார் –யோகேஸ்வரன் எம்.பி.

இந்த நாட்டினை அந்நியரிடமிருந்து காப்பாற்றுவதற்காக அன்று இராணுவத்தில் இணைவதற்கு விபுலானந்த அடிகளார் தயார் நிலையில் இருந்ததாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

அகில இலங்கை இந்துமாமன்றமும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும் இணைந்து ஏற்பாடுசெய்த நாவலர் மாநாடும் சிவதொண்டர் ஆன்மீக எழுச்சி சிந்தனைக்களமும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பில் ஆரம்பமானது.

மட்டக்களப்பு.கல்லடி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இராஜதுரை அரங்கில் இந்த நிகழ்வில் இன்று காலை கோலாகலமான முறையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக இந்தியாவின் பேரூராதீனம் இளையபட்டம் வணக்கத்திற்குரிய சீர்வளசீர் மருதாசல அடிகளார்,நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞாசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்,மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி பிரபு பிரபானந்தஜி மகராஜ் அகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

அந்நியர் ஆட்சிக்காலத்தில் இந்து மதம் அடக்கியொடுக்கப்பட்ட,தமிழ் மொழி ஒடுக்கப்பட்டு வேறுமொழி ஆட்சிசெய்துகொண்ட காலத்தில் தமிழ் மொழியையும் இந்து மதத்தினையும் பாதுகாக்க அவதரித்தவரே ஆறுமுகநாவலராகும்.
ஆறுமுகநாவலர் தனது காலப்பகுதியில் சமயப்பணி செய்தார்,சமூக பணி செய்தார்,தமிழ் பணி செய்தார்,அரசியல் பணி செய்தார்.இவ்வாறு தனது வாழ்நாளில் பலவற்றை செய்துள்ளார்.

தன்னை ஒரு தமிழனாக வாழவைத்துக்கொண்டே அவர் மற்றவர்களுக்கு உபதேசம் செய்தார்.இன்று பலர் தாங்கள் உரிய வகையில் வாழாமல் மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் நிலையே இருந்துவருகின்றது.

ஆலயங்கள் ஆன்மீகத்தினை வளர்க்கும் கூடங்களாக இருந்தன.ஆனால் இன்று கும்பாபிசேகம் செய்வதிலும் ஆலயங்களை புனரமைப்பதிலுமே தங்கியுள்ளது.ஆலயங்களில் ஆன்மீக போதனைகள் இல்லை.ஆனால் அந்நியர் ஆட்சிக்காலத்தில் ஆறுமுகநாவலரினால் ஆலயங்களில் போதனைகள் நிகழ்;த்தப்பட்டது.இலங்கையில் தமிழிலும் சமயத்திலும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்.

ஆறுமுக நாவலர் தொடர்பான பல விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளன.ஆறுமுக நாவலர் அரசியலுக்கு ஆதரவு வழங்கினார் என்ற விடயம் மறைக்கப்பட்டுள்ளது.சில நூல்கள் மட்டுமே அவற்றினை கூறிக்கொண்டுள்ளது.

இந்த நாட்டினை அந்நிய சக்திகளிடம் இருந்து காப்பாற்றவேண்டும் என்பதற்காக சுவாமி விபுலானந்த அடிகளார் கூட இராணுவத்தில் இணைவதற்கு தயாராகவிருந்தார்.இந்த செய்தகூட பல நூல்களில் மறைக்கப்பட்டுள்ளது.சுவாமி விபுலானந்தர் நாட்டுப்பற்று காரணமாக இராணுவத்தில் இணைவதற்கு தயாராகவிருந்தார்.பல விடயங்களை நாங்கள் மறைத்துவிட்டோம்.

ஆறுமுக நாவலர் இந்த நாட்டில் அரசியலில் இருப்பவர்கள் தமிழனாகவும் இருக்கவேண்டும் சைவனாகவும் இருக்கவேண்டும் என்று விரும்பினார்.அதனை அவர் சாதித்தார்.அதனையே நான் யாழ்ப்பாணத்திலும் குறிப்பிட்டேன்.

அன்று ஆறுமுக நாவலர் கண்ட கனவினை இன்று அந்த வடமாகாணம் நிறைவேற்றியுள்ளது.வடமாகாண முதலமைச்சர் நல்ல தமிழனாகவும் ஒரு நல்ல சைவனாகவும் இருக்கின்றார்.எங்கள் சார்பாக அரசியலுக்கு வருபவர்கள் ஆன்மீகத்தினையும் பிரதிபலிப்பவர்களாக இருக்கவேண்டும்.
ஆறுமுக நாவலர் பல விடயங்களைவ pட்டுச்சென்றள்ளார்.

அவற்றினை எங்கள் வாழ்வில் கடைப்பிடிப்பவர்களாக நாங்கள் இருக்கவேண்டும்.ஆறுமுக நாவலர் அன்று காட்டியநெறி இன்று கிழக்கு மாகாணத்தில் மாறிவருகின்றது.உண்மையான சைவன் சைவ உணவினையே உண்ணவேண்டும்.அது தவறியிருந்தாலும் பண்டிகை நாட்கள்,திருமண நாட்கள்,பிறந்த தினங்களிலாவது சைவ உணவினை உண்ணவேண்டும்.ஆனால் இன்று கிழக்கு மாகாணத்தில் அனைத்து நிகழ்வுகளிலும் உயிர்கள் பலியிடப்படுகின்றன.இது ஆறுமுக நாவலர் காட்டிய நன்நெறிக்கு எதிரானது,சைவ மக்களுக்கு எதிரானது.