பிரதேச செயலாளர்களையும் கிராம சேவையாளர்களையும் இடமாற்றம் செய்வார்களே தவிர பிக்குவுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கமாட்டார்கள்

மட்டக்களப்பில் பிரதேச செயலாளர்களையும் கிராம சேவையாளர்களையும் இடமாற்றம் செய்வார்களே தவிர பிக்குவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்கமாட்டார்கள் என பட்டிப்பளை பிரதேச மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.

பட்டிப்பளை பிரதேசத்தில் பட்டிப்பளை பிரதேச சிவில் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பிக்குவுக்கு எதிராக டயர் எரிக்கசெய்யப்பட்டு தமது எதிர்ப்பினை காட்ட முற்பட்டபோது அதனை தடுத்து நிறுத்திய கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் செயலாளருமான கி.துரைராஜசிங்கம்,அகிம்சை ரீதியில் நடைபெறும் இவ்வாறான போராட்டத்தில் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டால் இங்கிருந்து வெளியேறவேண்டிய நிலையேற்படும் என கூறியதுடன் தண்ணீர்கொண்டு எரிந்த டயர்களையும் அணைத்தார்.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்தின தேரர் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குள் புகுந்து பிரதேச செயலகத்தினை தாக்கி சேதப்படுத்திய நிலையிலும் அன்றைய பிரதேச செயலாளர் சிவப்பிரியாவினை தாக்கமுனைந்தபோதிலும் இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாத நிலையே இருந்துவருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அன்று இருந்த பிரதேச செயலாளர் சிவப்பிரியாவுக்கு நடந்த சம்பங்களே இன்றுள்ள பிரதேச செயலாளருக்கும் நடக்கப்போகின்றது.இன்றுள்ள பிரதேச செயலாளர் பிக்குவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தால் நாளை இந்த பிரதேச செயலாளருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கும்.

இந்து மதகுரு ஒருவர் அல்லது பொதுமகன் ஒருவர் இவ்வாறு நடந்திருந்தால் சிறையில் அடைத்திருப்பார்கள்.இனவாதத்தினை தூண்டும் வகையில் குறித்த மதகுரு பேசும் போதும் தமிழினத்தை கேவலமான முறையில் பேசும்போதும் நாங்கள் பொறுமையாக இருப்பதா எனவும் இங்கு பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.