மனித எச்சங்கள் மேலதி ஆய்வுகளுக்காக அனுப்பிவைப்பு

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனையில் இராணுவ முகாம் பாவனையிலிருந்து விடுவிக்கப்பட்ட காணியிலிருந்து மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் சில தடயங்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் பார்வையிடப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த காணியில் மலசல கூட குழியில் இருந்து பெறப்பட்ட மனித எலும்புகூடுகள் என சந்தேகிக்கப்படும் பகுதியிலுள்ள மண்ணை அரித்து அதில் கிடைத்த எலும்புத் துண்டுகளை மேலதிக ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் குறித்த பகுதி குற்றப் பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் பொலிஸார் காவல் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலதிக பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு முடிவு கிடைக்கும் வரை மலசலகூட பகுதிக்குரிய கட்டுமானப் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) மனித எச்சங்கள் கிடப்பதாக காணியின் உரிமையாளர் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து மூன்றாவது நாளாகிய இன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரி உட்பட தடயவியல் பொலிஸார் தகிதம் அங்கு சென்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்.கடந்த 1990ஆம் ஆண்டு முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஷ்ண மிஷன் பாடசாலை கட்டடத்தையும் அதன் அருகாமையிலுள்ள வீடுகளையும் காணிகளையும் உள்ளடக்கியதாக இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

தனியாருக்குச் சொந்தமான காணிகளின் ஒரு பகுதி போருக்குப் பின்னர் 2014ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டு ஒரு பகுதி உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டதுடன், மேலும் 45 வீடுகள் இராணுவத்தினரின் பாவனையிலுள்ளன.கையளிக்கப்பட்ட காணிகளில் தற்Nது புனர்வாழ்வு, புனரமைப்பு மீள்குடியேற்ற அமைச்சின் உதவியுடன் வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சம்பவ இடத்தினை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீசிறிநேசன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.