மட்டக்களப்பில் 150வது பொலிஸ் தினம் - பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர

பொலிஸ் திணைக்களத்தின் 150வது பொலிஸ் தினத்தின் கிழக்கு மாகாண நிகழ்வு மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றிலில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா,மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு பாட்டாளிபுரம் மைதானத்தில் பொலிஸ் திணைக்களத்தின் 150வது பொலிஸ் தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது பொலிஸ் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் சிறப்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டதுடன் சிறந்த பொலிஸ் நிலையங்களாக செயற்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கும் பரிசுகள் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன் இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக கொக்கி விளையாட்டும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் படை அதிகாரிகள்,பொலிஸ் அதிகாரிகள்,வர்த்தக சங்க பிரதிநிதிகள் உட்பட கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளையும் Nசுர்ந்த பொதுமக்கள் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்க சமூகத்தினால் பொலிஸ் மா அதிபர் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.