மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 288 திட்டங்களுக்கு 379 மில்லியன் ஒதுக்கீடு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இந்த ஆண்டு 228 அபிவிருத்தி திட்டங்களுக்கு 379 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளா வி.தவராஜா தெரிவித்தார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் மண்முனை வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான சிப்லி பாரூக்,இரா.துரைரெட்னம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது மண்முனைப்பற்றில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளதனால் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் விரைவுபடுத்தப்படவேண்டும் என அபிவிருத்திக்குழுவின் தலைவரினால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அத்துடன் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மட்டக்களப்பு மாநகரசபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மணல் வீதிகளை கிறவல் வீதியாகவோ,கொங்கிறீட் வீதியாகவோ அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியம் தொடர்பில் இங்கு வலியுறுத்தப்பட்டது.

இந்த மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்திற்கு சமூகமளிக்காத அதிகாரிகள் தொடர்பில் விளக்கம் கோரவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.