மட்டக்களப்பு மாநகரசபையினால் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டாக்காலி மாடுகளினால் ஏற்படும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள.

தற்போது மழைகாலம் ஆரம்பத்துள்ள நிலையில் கடந்த காலத்தில் அதிகளவு வீதி விபத்துகளை ஏற்படுத்தியுள்ள கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு –கல்முனை வீதியில் மட்டக்களப்பு மாநகரசபையினால் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் மாடு உரிமையாளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து மாடுகளை வீதிகளில் விடுவோருக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் வீடுகளில் அலையும் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் எம்.உதயகுமாரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் கீழ் நேற்று இரவு மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் மட்டக்களப்பு நகர் தொடக்கம் நாவற்குடா வரையிலான பிரதான வீதியில் அலைந்த கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டன.

பிடிக்கப்படும் மாடுகள் தொடர்பில் அதன் உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு தண்டப்பணம் அறவீடு செய்யப்பட்டதன் பின்னரே மாடுகள் கையளிக்கப்படும் என மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

கடந்த ஒரு வாரத்தில் 15க்கும் மேற்பட்ட மாடுகள் இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ள நிலையிலும் மீண்டும் மாடுகளை வீதிகளில் விடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நகரங்களில் மாடுகளை மேயவிடமுடியாது என்று சட்டம் உள்ள நிலையிலும் சிலர் அதனை கவனத்தில் கொள்வதில்லையெனவும் ஆணையாளர் தெரிவித்தார்.