இலங்கையில் 17 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் –மேல்மாகாண மேலதிக தேர்தல் ஆணையாளர்

இலங்கையில் 17 இலட்சம் பேர் மாற்றுத்தி றனாளிகளாகவுள்ளதாகவும் அவர்களில் 15இலட்சம் பேர் 60வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் மேல்மாகாண மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன்சிறி ரத்தனாயக்க தெரிவித்தார்.

தேர்தல் காலங்களில் மாற்றுத்திறனாளிகள் குறித்து அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

வடகிழக்கு மாகாணத்தில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் தேர்தல் காலங்கங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் திணைக்களம் அறிவுறுத்தல்களை வழங்கிவருகின்றது.

ஆளுகை விவகாரங்கள் மற்றும் செயற்பாடுகளில் மாற்றுத்திறனாளிகளின் செயற்பாடுகளுடனான குடியுரிமை மற்றும் பங்கேற்பினை மேம்படுத்தல் என்னும் தலைப்பிலான செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் இலங்கை தேர்தல் திணைக்களம்,கமீட் அமைப்பு இணைந்து இந்த நிகழ்வினை நடாத்தியது.

வாக்களிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள தடைகள் தொடர்பாக அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடலாக இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மேல்மாகாண மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன்சிறி ரத்தனாயக்க, மட்டக்களப்பு தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன்,கமீட் அமைப்பின் திட்ட பணிப்பாளர் க.காண்டீபன்,திட்டஇணைப்பாளர் இ.கலைவேந்தன் உட்பட பிரதேச செயலாளர்கள்,உதவி பிரதேச செயலாளர்கள்,பிரதேச சபையின் செயலாளர்கள்,திட்டமிடல் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள்,மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இலங்கையின் பல பாகங்களிலும் தேர்தல் காலங்களில் வாக்களிப்பின்போது மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பல்வேறு தெரிவிக்கப்படுவரும் நிலையில் அவர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்க்கும் வகையில் இந்த நிகழ்வினை கமீட் அமைப்பு யு.எஸ்.எயிட் நிறுனத்தின் அனுசரனையுடன் முன்னெடுத்துள்ளது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய மேலதி தேர்தல் ஆணையாளர்,
மாற்றுத்திறனாளிகள் நாங்கள் அதிகம் கவனம் செலுத்தவேண்டியவர்களாகவுள்ளனர்.உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவலின்படி உலக சனத்தொகையில் சுமார் ஒரு பில்லியன் பேர் மாற்றுத்திறனாளிகளாகவுள்ளனர். அது உலக சனத்தொகையில் 15வீதமாக கணிக்கப்படுகின்றது.

மாற்றுத்திறனாளிகளில் 20வீதமானோர் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வாழ்வதுடன் 80வீதமானோர் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் வாழ்கின்றனர்.

இலங்கையில் 2015 ஜுலைமாத சனத்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இரண்டு கோடியே இருபது இலட்சத்து ஐம்பத்து மூவாயிரத்து நானுற்றி எண்பத்தெட்டு பேர் வசிக்கின்றனர்.இவர்களில் 17 இலட்சம் பேர் மாற்றுத்திறனாளிகளாகவுள்ளனர்.இவர்களில் 60வயதை தாண்டியவர்கள் 15இலட்சம் பேர் மாற்றுத்திறனாளிகளாகவுள்ளனர்.

பிரதேச செயலகங்களில் மாற்றுத்திறனாளிகள் வந்துசெல்லும் வகையில் வழிகள் அமைக்கப்படவேண்டும்.அதனை இங்குள்ள பிரதேச செயலாளர்கள்,சபை செயலாளர்கள் மேற்கொள்ளவேண்டும்.