காத்தான்குடியில் விபத்துகளினால் இந்த ஆண்டு 12பேர் உயிரிழப்பு –காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பகுதியில் இந்த ஆண்டு விபத்துக்களினால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி ரி.ஜெயசீலன் தெரிவித்தார்.

மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு மீளாய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸார் விபத்துகளை குறைப்பதற்காக மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக் பாராட்டு தெரிவித்தார்.

இதன்போது காத்தான்குடி பொலிஸ் பிரிவு பகுதியில் வீதி விபத்துகளை தடுக்கும் வகையில் பொலிஸார் மேற்கொண்டுவரும் நடவடிக்கை தொடர்பில் பதில் பொறுப்பதிகாரி விளக்கமளித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இந்த ஆண்டு காத்தான்குடி பொலிஸ் பிரிவு பகுதியில் விபத்து சம்பங்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளது.12 விபத்து மரணங்கள் ஏற்பட்டுள்ளன.பாரிய விபத்துகள் 200க்கும் மேலாக பதிவாகியுள்ளது.கிரான்குளம் தொடக்கம் கல்லடி வரையிலான பகுதிகளில் இந்த விபத்துகள் பதிவாகியுள்ளன.சேதம் தொடர்பான விபத்துகள் 400க்கு மேல் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சரின் அறிவுறுத்தலின் கீழ் வீதி ஓழுங்கினை பேணுவதற்கு 60க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தியுள்ளது.இது மக்களுக்கு சாரதிக்கு தொந்தரவாக இருந்தாலும் விபத்துகள் குறைந்துள்ளது என்றார்.

இதன்போது மண்முனைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் பொலிஸார் விபத்துகளை குறைப்பதற்காக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.