முதியவர்கள் வீட்டில் ஒரு நூலகம்

(லியோன்)

 முதியவர்கள் வீட்டில் இருக்கின்ற போது ஒரு நூலகமே இருப்பது போன்று ஒரு உணர்வு ஏற்படும்  என ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக  உதவி பிரதேச  செயலாளர்  திருமதி . நவரூப ரஞ்சனி முகுந்தன்  தெரிவித்தார்.


சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வுகளும்  அவர்களது உரிமைகள் பாதுகாப்பு தொடர்பாக  வேலைத்திட்டங்களும்  இடம்பெற்று வருகின்றது .

இதற்கு அமைய சர்வதேச முதியோர் தின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட ஜெயந்திபுரம் கிராம சேவை பிரிவில்  சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு சிரேஷ்ட பிரஜைகளின்  சங்க தலைவர் எ . வேதநாயகம் தலைமையில் ஜெயந்திபுரம் பலநோக்கு கட்டிட மண்டபத்தில்  சிறப்பு நிகழ்வுகள் இன்று நடைபெற்றது .

இந்நிகழ்வில் சிரேஷ்ட பிரஜைகளின் கலை நிகழ்வுகளும் , அவர்களுக்கான பொன்னாடை போர்த்தி கௌரவிப்பும் ,  பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகா ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்  திருமதி . நவரூப ரஞ்சனி முகுந்தன் மற்றும்  கிராம சேவை உத்தியோகத்தர்  லவக்குமார் , மட்டக்களப்பு பொலிஸ்  சிவில் பாதுகாப்பு குழு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஜெயந்திபுரம் கிராம சிரேஷ்ட பிரஜைகள், கிராம சிறுவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்

முதியவர்கள் வீட்டில் இருக்கின்ற போது ஒரு நூலகமே இருப்பது போன்று ஒரு உணர்வு ஏற்படும் . அந்த அளவு அனுபவங்கள் அவரிடையே காணப்படும் . அவர்கள் இளமை காலம் முதல் இன்று வரை பல்வேறு துன்பங்களையும் கஷ்டங்களையும் முகம் கொடுத்து மீண்டு வந்தவர்கள் . ஆகவே அவர்களிடம் நிறைய அனுபவங்கள் இருக்கும் அந்த அனுபவங்களின் மூலம் எமது சிறார்களை நெறிபடுத்த கூடியதாக இருக்கும் என ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக  உதவி பிரதேச செயலாளர்  திருமதி . நவரூப ரஞ்சனி முகுந்தன் தனது சிறப்புரையில் தெரிவித்தார் .