யாழில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது –மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்

யாழ்குடாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே வடக்கில் இரண்டு மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதை வெளிப்படுத்துவதாக சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விஜயம் செய்த அமைச்சர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரினால் கொல்லப்பட்டதானது யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை காட்டிநிற்கின்றது.

தமிழ் சிங்களவர்கள் என்ற பேதம்பார்த்து இனவாதத்தினை தூண்டாது பொலிஸ் அதிகாரிகள் சட்டத்தினை சரியான முறையில் கையாளவேண்டும்.அவர்கள் சட்டத்தினை சரியான முறையில் கையாண்டிருந்தால் துப்பாக்கிசூடு நடாத்தியிருக்கமாட்டார்கள்.இன்று சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்தையோ இது காட்டுகின்றது.

இன்று வடகிழக்கில் போதைப்பாவனை அதிகரித்து காணப்படுகின்றது.கடந்த காலத்தில் இருந்த யுத்த சூழ்நிலையின்போது அப்போதைய ஆட்சியாளர்களினால் அனுப்பிவைக்கப்பட்ட போதைப்பொருள்கள் காரணமாகவே இந்த நிலைமை தற்போது அதிகரித்துள்ளது.

அதற்கு இன்று இளைஞர்கள் அடிமைப்பட்டுள்ளதன் காரணமாக பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டிய சூழ்நிலையேற்பட்டுள்ளது.இந்த நல்லாட்சியில் அவற்றினைக்கட்டுப்படுத்தும் வகையில் நீதிமன்றங்களில் சிறந்த நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டுவருகின்றன.

கடந்த காலத்தில் நீதிமன்றங்கள் ஜனாதிபதி செயலகத்திலும் பிரதமர் செயலகத்திலும் இயங்கியது.ஆனால் இன்று நல்லாட்சியின் கீழ் நீதிபதிகள் சுதந்திரமாக செயற்படுவதான நிலையிருப்பதன் காரணமாக சிறப்பான முறையில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்கின்றனர்.

ஆனால் பொலிஸ் அதிகாரிகளை பொறுத்தவரையில் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கும்போது அதனை விசாரணைசெய்து நீதிமன்றுக்கு அறிக்கைகளை வழங்குவதில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழி தெரிந்தவர்கள் குறைந்தளவிலேயே உள்ளனர்.இதனாலேய இந்த நிலைமை ஏற்படுகின்றது.