மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவில் அமைச்சர் றிசாத் -தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம்

அமைச்சர் றிசாத்பதியூதினை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவில் இணைக்கும் நடவடிக்கைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையான கண்டனத்தினை தெரிவித்துள்ளதுடன் அவ்வாறு அவர் அபிவிருத்திக்குழுவில் இணைவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டது எனவும் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதியும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக உள்ளபோது, றிசாத்பதியூதினையும் நியமிக்கவேண்டிய அவசியம் இல்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பனிச்சையடி அருள்மிகு வீரம்மாகாளியம்மன் ஆலயத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பத்திரகாளியம்மன் ஆலய திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

அருள்மிகு வீரம்மாகாளியம்மன் ஆலயத்தின் தலைவர் எம்.சிவபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் மற்றும் ஞா.சிறிநேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது விசேட பூஜைகள் நடைபெற்று ஆலயம் திறந்துவைக்கப்பட்டதுடன் திருப்பணி உண்டியலும் இதன்போது திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,ஆலய பரிபாலனசபை உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பல தேவைகள் நிறைவேற்றப்படவேண்டிய நிலையில் உள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் அரசியலை மையமாக வைத்து சில வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.கடந்த ஆட்சிக்காலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கின் அபிவிருத்திக்காக வெளிநாடுகள் இருந்து பெருமளவான நிதிகள் குவிந்தன.அந்த நிதிகளில் பெரும்பாலானவை தென்பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டன.

தற்போதைய நிலையில் வடகிழக்கில் பல்வேறு அபிவிருத்திகளை செய்யவேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆர்வாமாக செயற்படுகின்றது.கடந்த அரசாங்கத்தில் அதன் பிரதிநிதிகளை மாவட்ட அஅபிவிருத்திக்குழுவில் நியமித்தார்கள். மாவட்ட அபிவிருத்தியினை அவர்கள் திட்டமிட்டு செயற்படுத்தினார்கள்.

ஆனால் தற்போதுள்ள நல்லாட்சியில் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்துள்ளன.இன்று மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவர் என்னும் பதவி தலைவர்கள் என்ற மாற்றப்பட்டுள்ளது.பலர் உருவாகிவிட்டனர்.

மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அபிவிருத்திக்குழுவின் தலைவராக இருக்கலாம்.ஆனால் இன்று ஒரு கட்சியின் பிரதேச உறுப்பினர் கூட மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராக இருக்கலாம் என்ற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.

துரதிஸ்டவசமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு அபிவிருத்திக்குழு தலைவர்கள் உள்ளனர்.இவர்கள் அனைவரும் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்தவர்கள்.அவர்களில் மூன்று சகோதர இனத்தை சேர்ந்தவர்களும் ஒரு தமிழரும் உள்ளனர்.75வீதமுள்ள தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதி.25வீதமுள்ள சகோதர இனத்தவர்களுக்கு மூன்று பிரதிநிதிகள் உள்ளனர்.

ஆனால் தற்போது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தனது பிரதிநிதியொருவரை இங்கு அனுப்பவுள்ளது.வெளிமாவட்டத்தில் உள்ள அமைச்சர் றிசாத் பதியூதின் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவில் இணையவுள்ளார் என்ற செய்தி எங்களுக்கு கிடைத்துள்ளது.இதனை வன்மையாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டிக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்ட மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் இங்கு உள்ளனர்.அந்த கட்சியை சேர்ந்தவர்களும் இங்கு உள்ளனர்.மன்னாரை சேர்ந்த றிசாத்பதியூதின் வந்து இங்கு எமக்கு அபிவிருத்திசெய்ய தேவையில்லை.அவர் அமைச்சராக இருந்துவருகின்றார்.

அவர் இலங்கைக்கான அமைச்சராகவுள்ளார்.தனது ஒதுக்கீடுகள் மூலம் இந்த மாவட்டத்திற்கு எதனையும் செய்யவிரும்பினால் செய்யலாம்.அதற்காக மாவட்ட அபிவிருத்திக்குழுவின் கூட்டத்தில் பங்குகொண்டு ஆலோசனை வழங்குவதற்கு அனுமதிக்கமுடியாது.

இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு நிறைவான ஆதரவினை வழங்கியவர்கள் என்ற அடிப்படையில் அதனை நாங்கள் வன்மையாக எதிர்க்கின்றோம்.அந்த எதிர்ப்பினை வெளிக்காட்ட தயாராகவும் இருக்கின்றோம்.இது தொடர்பில் சம்பந்தன் ஐயாவின் கவனத்திற்கும் கொண்டுசென்றுள்ளோம்.

அமைச்சர் றிசாத்பதியூதின் இங்குவந்து மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக செயற்படுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் அனுமதிக்காது என்றார்.