டெங்கு நோய் தொடர்பில் விழிப்பூட்டும் சிறுவர் நூல் வெளியீடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வினை சிறுவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மக்கள் வங்கியினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“உயிர் உறிஞ்சி”என்னும் தலைப்பில் டெங்கு தொடர்பான விழிப்புணர்வினை சிறுவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையிலான நூல் வெளியிட்டுவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் மட்டக்களப்பு வங்கி கிளையின் முகாமையாளர் எஸ்.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார்,உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சித்திரவேல்,மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் அகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் வர்த்தக சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

எழுத்தாளர் ஓ.கே.குணநாதனின் கைவண்ணத்தில் இந்த நூல் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றினை மக்கள் வங்கி வெளியீடுசெய்துள்ளது.

இந்த நூலின் முதல் பிரதி மட்டக்களப்பு மாவட்ட விவசாய வர்த்தக கைத்தொழில் சங்கத்தின் ஸ்தாபகரும் வர்த்தகருமான ரஞ்சிதமூர்த்திக்கு வழங்கப்பட்டு ஆரம்பித்துவைக்கப்பட்டது.இதன்போது நூல் தொடர்பான ஆய்வுரையினை ஆசிரியர் கௌரீசன் நடாத்தினார்.

இதன்போது மாணவர்கள் மத்தியில் பல்வேறு போட்டி நிகழ்வுகள் நடைபெற்றதுடன் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.