முறக்கொட்டாஞ்சேனையில் மனித எச்சங்கள் மீட்பு-காணாமல்போனவர்களுடையதா என சந்தேகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் குளியொன்றில் இருந்து மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் வீட்டில் மலசலகுழி அமைப்பதற்கு மடு வெட்டியபோது எரிக்கப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

90ஆம்ஆண்டு காலப்பகுதியில் இப்பகுதியில் இடம்பெயர்ந்த இப்பகுதி மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுவரும் நிலையில் இப்பகுதியில் வீடுகள் அமைக்கப்படும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடக்கப்பட்டுள்ளன.

சுமார் 78 குடும்பங்களுக்கு சோந்தமான வீடுகள் விடுவிக்கப்பட்டு அதற்கான வீட்டுத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

குறித்த வீட்டுத்திட்டத்தில் அமைந்துள்ள திருமதி வானதி உதயகுமார்(50) என்பவரின் காணியில் மலசலகூடம் அமைப்பதற்கு வெட்டப்பட்ட குழியில் இருந்தே குறித்த எலும்புத் துகள்கள் மீட்கப்பட்டுள்ளன.

வெட்டப்பட்ட குழியில் டயர் மற்றும் இரயில்சிளிப்பர் கட்டைகள் எரிக்கப்பட்ட அடையாளங்கள் இருப்பதனால் குறித்த பகுதியில் மீட்கப்பட்ட எலும்புத்துகல்கள் குறித்து விசாரணை செய்யப்படவேண்டுமென பிரதேச மக்கள் பொலீசாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதன்போது அப்பகுதிக்கு விஜயம் செய்த ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் அது தொடர்பாக நீதிமன்றின் கவனத்திற்கும் கொண்டுசென்றுள்ளனர்.

தற்போது அப்பகுதிக்கு பாதுகாப்புகளை பலப்படுத்தியுள்ள பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.