உலகினை உறவால் இணைக்கும் பணிகளை ஊடகங்கள் மேற்கொள்ளவேண்டும் -மட்டு ஆயர்

பல்வேறு காரணங்களினால் உடைபட்டுக்கிடக்கும் உலகத்தினை உறவால் ஒன்றுபடுத்தும் பணிகளை ஊடகங்கள் மேற்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு - அம்பாறை மறை மாவட்டங்களுக்கான ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

50வது உலக தொடர்புதின விழா இன்று மட்டக்களப்பு மறைமாவட்ட சமூக தொடர்பு நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மறைமாவட்ட சமூக தொடர்பு நிலையத்தின் இயக்குனர் அருட்தந்தை ரமேஸ் கிறிஸ்ரி தலைமையில் மறைக்கல்வி நிலைய மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்டங்களுக்கான ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை கலந்துகொண்டார்.

சுpறப்பு அதிதியாக திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் கே.ஞானரெத்தினம் கலந்துகொண்டதுடன் சமூக தொடர்பும் இரக்கமும் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இதன்போது பல்வேறு வழிகளிலும் சமூகத்திற்காக அர்ப்பணிப்பு மிக்க சேவையாற்றிவரும் விஞ்ஞானியும் முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தருமான பேராசிரியர் அருட்தந்தை ஜி.எப்.இராஜேந்திரம் மற்றும் கலை,எழுத்து துறையில் தனக்கென இடத்தினைக்கொண்டுள்ள பி.ஜே.டேவிட் ஆகியோர் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வின்போது மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பாடல்களும் இசைக்கப்பட்டன.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆயர்,

இணையவழியாக தற்கொலைக்கு தூண்டும்செயற்பாடுகள் அதிகரித்துவருகின்றன.இணையத்தளங்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர்.சமூக தொடர்பு சாதனங்கள் உறவுகளை கட்டியெழுப்பும் சக்திகொண்டவை.மனித சமூகத்தினை ஒன்றிணைக்கும் ஆற்றல்கொண்டவை.

ஊடகங்களினால் சமூகங்களுக்கிடையிலான உறவினை வளர்த்தெடுக்கமுடியும்.அதேபோன்று சமூகங்களிடையே பிரிவினையையும் வேற்றுமையினையும் உருவாக்கமுடியும்.ஒரு பக்கத்தில் தீமையிருந்தால் நன்மை ஆயிரத்தினைப்பெறமுடியும்.

இன்றை டிஜிட்டல் உலகத்தில் ஒருவரை ஊக்கப்படுத்தவும் முடியும் ஒருவரை உதாசீனப்படுத்தவும் முடியும்.பல்வேறு காரணிகளினால் உடைபட்டுக்கிடக்கும் உலகத்தில் உறவால் ஒன்றுபட்டுவாழ ஊடகங்கள் துணைசெய்யவேண்டும்.