கிழக்கு மாகாணத்திலே ஒற்றுமையாக நல்லாட்சியை நடத்துகின்றோம் முதலமைச்சர் நசீர் அஹமட்

(லியோன்)

கிழக்கு மாகாணத்திலே ஒற்றுமையாக நல்லாட்சியை நடத்துகின்றோம்   , இந்த  நல்லாட்சியில் சமூகத்தில் வேறுபாடுகள் இன்றி நாங்கள் மாகாண ஆட்சியை கொண்டு வருவோம் . உண்மையான நல்லாட்சி இப்போது நடத்தப்பட்டுகொண்டு இருக்கின்றது  என கிழக்குமாகாண முதலமைச்சர்  நசீர் அஹமட்  மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு  உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்


கிழக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் நடாத்தும் மலரும் கிழக்கு   கைத்தொழிற் கண்காட்சி இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது  . 
“ கிழக்கிலங்கைக் கைத்தொழிற் துரையின் ஒரு புதிய யுகம் “ எனும் தொனிப்பொருளில்  கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் கிழக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் மலரும் கிழக்கு  கைத்தொழிற் கண்காட்சி மட்டக்களப்பு கல்லடி அலுவலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது . 

இந்நிகழ்வில் பிரதம  அதிதியாக கிழக்குமாகாண முதலமைச்சர்  நசீர் அஹமட் கலந்துகொண்டு கண்காட்சியினை திறந்து வைத்தார் .

இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட கண்காட்சி நிகழ்வில் சிறந்த கைத்தொழில் பயிற்றுவிப்பாளர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர்  ஆரியவதி கலப்பதி , கிழக்குமாகான சபை பிரதி தவிசாளர்  இந்திரகுமார் பிரசன்னா , கிழக்குமாகாண சபை உறுப்பினர்களான  இரா .துரைரட்ணம், கே .கருணாகரன் , ஜி .கிருஷ்ணபிள்ளை , மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் .உதயகுமார் , மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்  வி .தவராஜா , மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் , ஊழியர்கள் ,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர் ..

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய  கிழக்குமாகாண முதலமைச்சர் தெரிவிக்கையில் தற்போது  சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான பெருபான்மை சமூகத்தில் இருக்கின்ற  தீவிரவாத குழுக்கள்  சிறுபான்மை சமூகத்திற்கு ஒரு தீர்வும் வரக்கூடது என்று பல உயிர்கள் பலிகொடுத்தும் உணராத நிலையில் இருக்கின்ற வேளையில் தான் நாங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றோம் .

ஆகவே இதை தகர்த்தெறிந்து தீர்வை கொண்டு வரவேண்டிய பொறுப்பு நாட்டின் ஜனாதிபதிக்கு , பிரதம மந்திரிக்கும்  நாட்டின் அரசியல் தலைமைகளுக்கும் இருக்கின்றது .
எங்களுக்குள் என்ன விட்டுக்கொடுப்புகள் வந்தாலும் குறிப்பாக தமிழ் ,முஸ்லிம் சமூகம் ஒற்றுமையாக வாழவேண்டிய தேவைகள் இருக்கின்றது .

நாங்கள் திட்டமிட்டு பிரிக்கப்பட்ட வரலாறு இருக்கின்றது , அவற்றை கடந்து சுவர்கள் போட்டு பிரிக்கப்பட்ட வரலாறுகள் , சுவர்கள் போட்டு முஸ்லிம் பாடசாலைகள் , தமிழ் பாடசாலைகள் என்று ஆரம்பத்திலே இனவெறியை விதைத்த வரலாறு இருக்கின்றது .

இவற்றை எல்லாம் நாங்கள் உணர்ந்து  குறிப்பாக தமிழ் ,முஸ்லிம் . சிங்கள  சமூகம்  இந்த கிழக்கு மாகாணத்திலே ஒற்றுமையாக நல்லாட்சியை நடத்துகின்றோம் . 

எங்கள் அரசியல் தலைமைகளில் நல்லாட்சியை ஏற்படுத்தி இருக்கின்றோம் , அந்த நல்லாட்சியில் சமூகத்தில் வேறுபாடுகள் இன்றி நாங்கள் மாகாண ஆட்சியை கொண்டு வருவோம் . உண்மையான நல்லாட்சி இப்போது நடத்தப்பட்டுகொண்டு இருக்கின்றது .

இதை நாங்கள் விமர்சிப்பது என்றாலும் விமர்சிக்கலாம் , நாங்கள் எல்லாவற்றையும் உணர்ந்து எந்த சமூகத்திற்கும் பாதிப்பில்லாமல் ஒரு தீர்மானம் எடுக்கின்ற அரசியல் தலைமைகளாக நாங்கள்  நல்லாட்சியை நடத்தி வருகின்றோம் . இந்த நல்லாட்சி அதிகாரிகள் மட்டத்திலும் ,மக்கள் மத்தியிலும் வரவேண்டும் . அதற்கு நாங்கள் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துக்கொண்டார் .


இன்று  ஆரம்பித்து வைக்கப்பட்ட “ கிழக்கிலங்கைக் கைத்தொழிற் துரையின் ஒரு புதிய யுகம் “ எனும் தொனிப்பொருளில்  மலரும் கிழக்கு  கைத்தொழிற் கண்காட்சியானது  இன்றும் நாளையும் (24,25) இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .