அத்துமீறிய சிங்கள குடியேற்றம் தடுக்குமாறு கோரி மட்டக்களப்பில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புன்னக்குடா கடற்கரையினை அண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்ட விரோத குடியேற்றங்களை அகற்றுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திலேயே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமது பகுதிகளில் வேறு பிரதேசங்களில் இருந்துவருவோர் காணிகளை பிடித்து குடியேறுவதுடன் தமது வாழ்வாதாரத்தினையும் பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்வதாக கூறி நேற்று திங்கட்கிழமை பிற்பகல் அப்பகுதி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது பகுதிக்குள் கடந்த காலத்தில் வசித்ததாக கூறி பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் தமது காணிகளை பிடிப்பதாகவும் தாம் மீன்பிடிக்கும் இடங்களை அபகரிப்பதாகவும் இதற்குரிய நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது அப்பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மீனவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வுபெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

இதனடிப்படையில் நேற்று பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பாராரளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோரினால் பிரஸ்தாபிக்கப்பட்டது.

குறித்த பகுதியில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் காணிகளை பிடிப்பதன் காரணமாக 400க்கும் மேற்பட்ட குடும்பங்களின் தொழில் பாதிக்கப்படுவதாக இங்கு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

இந்த அத்துமீறிய குடியேற்ற நடவடிக்கைகளுக்கு புலனாய்வுத்துறையினரும் ஆதரவு வழங்குவதாகவும் அவர்கள் அப்பகுதி மக்களை அச்சுறுத்துவதாகவும் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் அப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு வேறு பகுதிகளில் காணிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பிடிக்கப்படும் காணியானது காணி அதிகாரசபைக்குரிய காணி என்பதனால் அவர்களே இதற்குரிய நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் யு.உதயசிறிதர் இங்கு தெரிவித்தார்.

வேறு பகுதிகளில் அவர்களுக்கு அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய காணிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீண்டும் இங்கு வந்து காணிகளை அபரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வதாக மாவட்ட காணி அதிகாரசபையின் பணிப்பாளர் கே.விமல்ராஜ் இங்கு தெரிவித்தார்.

62 குடும்பங்களுக்கு வேறு பகுதிகளில் காணிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அவர்கள் வந்து அத்துமீறிய வகையில் காணிகளைப்பிடிப்பதாகவும் தாங்கள் தடுக்கச்சென்றால் அது சமூக பிரச்சினையாக மாற்றமுயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் அப்பகுதியில் அத்துமீறியவர்களை பொலிஸாரின் உதவியுடன் பிரதேச செயலாளாரின் ஒத்துழைப்புடன் அப்பகுதியில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் அதிகாரிகளுக்கு பணிப்புரைகளை வழங்கினார்.