சில மாணவர்களின் செயற்பாடுகள் பாடசாலைக்கு களங்கம் ஏற்படுத்தும் நிலை

ஒரு பாடசாலையின் வளர்ச்சி அதன் புகழ் என்பன அந்த பாடசாலையின் மாணவர்களினாலேயே தீர்மானிக்கப்படுகின்றது.

அந்த மாணவர்களினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் அந்த பாடசாலையின் பெயருக்கு களங்கத்தினை ஏற்படுத்துவதுடன் வளர்ச்சியையும் தடுக்கும் நிலைமை ஏற்படும்.

அதில் புகழ்பெற்ற பாடசாலைகளின் மாணவர்களின் நடத்தைகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் உன்னிப்பாக கவனிக்கும் நிலைமை இருந்துகொண்டே உள்ளது.

அண்மையில் மட்டக்களப்பின் பிரபல பாடசாலையொன்றின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் நடை பயண நிகழ்வு நடைபெற்றது.

அதன்போது சில மாணவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டமை காணமுடிந்தது.

நடைபயணத்தின் ஆரம்ப நிகழ்வின்போது வழிபாடுகள் மற்றும் உரைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பாடசாலைக்கு வெளியில் நின்ற மாணவர்கள் (பழைய மாணவர்களா என்பது தெரியாது)சிலர் அதிகளவான பாடல் ஒலியை எழுப்பி நிகழ்விற்கு இடையூறை ஏற்படுத்தியிருந்ததை காணமுடிந்தது. அந்தவேளையில் அது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அதேபோன்று நடைபவனியின்போது பிரபல பெண்கள் கல்லூரிக்கு முன்பாக வேண்டத்தகாத வார்த்தை பிரயோகங்களைக்கொண்ட பாதகைகளை சில மாணவர்கள் ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இவ்வாறான செயற்பாடுகள் ஒட்டுமொத்த பாடசாலைக்கும் அவப்பெயரையே தேடித்தரும் நிகழ்வாக அமைந்துள்ளது.

பாடசாலையின் பெருமையினையும் அதன் வரலாற்றினையும் நினைவுகூர்ந்து அர்ப்பணிப்புமிக்க நிகழ்வாக பாடசாலையின் பழைய மாணவர்களினால் நடாத்தப்படும் இவ்வாறான நிகழ்வுகளை சிறப்பிப்பது அந்த பாடசாலைக்கு வழங்கும் கௌரவம் என்பதுடன் அந்த பாடசாலையில் கற்றதனால் தமது பெற்றோருக்கு வழங்கும் கௌரவமாகவும் அதனைக்கொள்ளப்படவேண்டும்.

எதிர்காலத்தில் இவ்வாறான மாணவர்கள் தமது செயற்பாடுகளை திருத்தி சமூகத்திற்கும் பாடசாலைக்கும் நற்பெயரை பெற்றுக்கொடுக்கும் நிலையை ஏற்படுத்தவேண்டும்.