அலையென திரண்ட புனித மைக்கேல்ஸ் மாணவர்கள் - “மைக்வோக் 2016”

இலங்கையின் புகழ்பெற்ற தமிழ் பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியின் 143வது கல்லூரி தினத்தினை முன்னிட்டு மாபெரும் நடைபவனி நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.
கடந்த மூன்று வருடமாக இந்த நடைபவனியை புனித மைக்கல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கமும் பாடசாலை சமூகமும் இணைந்து நடாத்திவருகின்றது.

இதன்கீழ் நடைபவனியின் ஆரம்ப நிகழ்வு பாடசாலை அதிபர் வெஸ்லியோ வாஸ் தலைமையில் பாடசாலை முன்பாக ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.சிறப்பு அதிதிகளாக ஜேசுசபை துறவிகள்,பாடசாலையின் முன்னாள் அதிபர்கள்,ஆசிரியர்கள்.பழைய மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பாடுமீன் சாரணர் குழு முதன்முறையாக அமைக்கப்பட்டதுடன் குறளைச்சாரணர் குழுவும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் புனித மைக்கேல் கல்லூரியின் சாரணர் அமைப்பினை சிறப்பிக்கும்வகையில் உருவாக்கப்பட்டுள்ள பாடலும் இதன்போது ஒலிபரப்பு செய்யப்பட்டது.

அத்துடன் சாரணர்களுக்குரிய பட்டியும் அணிவிக்கப்பட்டதுடன் பாடசாலையின் சிரேஸ்ட சாரணியர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

இதேபோன்று பாடசாலையின் வளர்ச்சிக்கு கடந்த காலத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் அருட்தந்தையர்களின் பங்குபற்றுதலுடன் 2016ஆம் ஆண்டுக்கான புனித மைக்கேல் நடைபவனி சிறப்பான முறையில் ஆரம்பமானது.
இந்த நடை பவனியின்போது ஆடல்பாடல்களுடன் மாணவர்கள் ஊர்வலமாக சென்றமை குறிப்பிடத்தக்கது.