தமக்கான உரிமைகளை வழங்க கோரி மட்டக்களப்பில் செவிப்புலன் வலுவற்றவர்களின் கவன ஈர்ப்பு பேரணி

செவிப்புலன் வலுவற்றவர்களின் உரிமைகளையும் அவர்களின் தேவையினையும் நிறைவேற்றும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க கோரி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு பேரணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

சர்வதேச செவிப்புலன் வலுவற்றோர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கவன ஈர்ப்பு பேரணி நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்தில் உள்ள செவிப்புலன் வலுவற்றோர் சங்கத்தின் காரியாலயத்தில் ஆரம்பமான பேரணியானது திருமலை வீதியூhடாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் நடைபெற்றது.

இந்த பேரணியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட செவிப்புலன் வலுவற்றவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

சுமூகத்தில் தாங்கள் ஒதுக்கப்படும் நிலை காணப்படுவதாகவும் தமக்கான முறையான கல்வித்திட்டம் அமுலாக்கம் செய்யப்படும்போது சமூகத்தில் சிறந்த நிலைக்கு தங்களால் வரமுடியும் எனவும் செவிப்புலன் வலுவற்றோர் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் உள்ள அனைத்து மக்களைப்போல் தங்களையும் கருத்தில்கொள்ளவேண்டும் எனவும் தமக்கு ஏனையவர்கள் போல் சமவுரிமை வழங்கப்படவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இலங்கையில் உள்ள மூவின மக்கள் இடையே வேறுபாடுகள் இருந்தாலும் செவிப்புலன்வலுவற்றோர் ஒரே மொழியில் ஒன்றுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த கவன ஈர்ப்பு பேரணியில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னமும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார்.