கடந்த காலத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்களுக்க அடிபணியாமல் எனது கடமையினையாற்றியுள்ளேன். –மட்டு.மேல் நீதிமன்ற நீதிபதி

கடந்த காலத்தில் எனக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டபோதிலும் அதற்கு எல்லாம் அடிபணியாது அவற்றினையெல்லாம் எதிர்கொண்டு எனது கடமையினை தவறாதுநிறைவேற்றியுள்ளதாக மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி திருமதி வி.சந்திரமணி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய திருமதி வி.சந்திரமணி நேற்று வெள்ளிக்கிழமையுடன் ஓய்வுபெற்றுச்செல்வதை தொடர்ந்து அவருக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற ஊழியர்கள் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தின் வலய கணக்காளர் எஸ்.சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தின் பதிவாளர் ஜனாப் சம்சுல்குதா உட்பட மேல் நீதிமன்ற ஊழியர்கள்,உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஞாயிற்றுக்கிழமை தனது 61வது பிறந்த தினத்தினை கொண்டாடும் மேல் நீதிமன்ற நீதிபதியுடன் ஊழியர்கள் கேக்வெட்டி பிறந்த நாள்கொண்டாடினர்.

அதனைத்தொடர்ந்து தனது நீதிமன்ற துறை வாழ்வில் இருந்து 30 வருடத்திற்கு பின்னர் ஓய்வுபெற்றுச்செல்லும் மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி வி.சந்திரமணி உத்தியோகத்தர்கள்,ஊழியர்களினால் கௌரவிக்கப்பட்டார்.

இதன்போது மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய திருமதி வி.சந்திரமணி கடமையாற்றியபோது தாங்கள் எதிர்கொண்ட விடயங்கள் தொடர்பில் உத்தியோகத்தர்கள் கருத்துகளை முன்வைத்ததுடன் நீதிவானும் தான் நீதித்துறையில் எதிர்கொண்ட சவால்கள் தொடர்பில் கருத்துரைகளை வழங்கினார்.

1955ஆம் ஆண்டு 09ஆம் மாதம் 05ஆம் திகதி மண்முனை தென் எருவில் பிரதேசத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறில் விஸ்வலிங்கம்-பூபதிப்பிள்ளை தம்பதியினருக்கு பெண்ணாக பிறந்த மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி வி.சந்திரமணி ஆரம்பக்கல்வியை கோட்டைக்கல்லா மகா வித்தியாலயத்தில் பயின்றார்.

அதன் பின்னர் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அவர் வந்தாறுமூலை மகா வித்தியாலத்தில் (இன்று கிழக்கு பல்கலைக்கழகம் உள்ள இடம்)தங்கியிருந்து உயர் கல்வியை பயின்றார்.

1982ஆம் ஆண்டு கொழும்பு சட்டக்கல்லூரியில் சட்டப்பட்டப்படிப்பினை பூர்த்திசெய்த அவர்,1983ஆம் ஆண்டு சட்டத்தரணியாக சட்டத்துறைக்குள் புகுந்தார்.இவர் ஆரம்ப சட்டத்தரணி சேவையினை மட்டக்களப்பு மற்றும் கல்முனை நீதிமன்றங்களில் மேற்கொண்டார்.

1987ஆம் ஆண்டு ஆரம்ப நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து நீதிமன்ற துறைக்குள் நுழைந்த அவர்,1990ஆம்ஆண்டு கொழும்பு துறைமுக நீதிவான் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்றார்.

1998வரையில் நீதிவான் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய அவர் 1998ஆம் ஆண்டு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற நீதியாக நியமனம்பெற்றார். நீதிவான் நீதிமன்ற நீதிபதியாக சுமார் பதினைந்து வருடங்கள் கடமையாற்றி அவர் கொழும்பு மற்றும் அதனை அண்டியப ல்வேறு பகுதிகளிலும் நீதிவான் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றியுள்ளார்.

2006ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக திருகோணமலை மாவட்ட நீதிமன்றுக்கு நியமிக்கப்பட்ட இவர் 2008ஆம் ஆண்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்டார்.

இதன்போது அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையேற்றுச்சென்றவர் 2012ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றில் மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றியுள்ளார்.அதனைத்தொடர்ந்து 2014ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு இடமாற்றும்பெற்றுவந்த இவர் ஓய்வுபெறும் வரையில் தனது சேவையினை இவர் மேற்கொண்டிருந்தார்.

மட்டக்களப்பு மக்களினால் இரும்பு பெண் என்று அழைக்கப்படும் மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி வி.சந்திரமணி சர்வதேச ரீதியாக நெதர்லாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் நீதிமன்ற பயிற்சிகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.