கல்நந்தி புல்லுண்டு போர்த்துக்கீசரை கல்லாக்கிய கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் மஹோற்சவம் ஆரம்பம்

இலங்கையில் உள்ள ஈச்சரங்களில் ஒன்றாகவும் தானாக தோன்றிய ஆலயங்களில் ஒன்றாகவும் கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று சனிக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கல்நந்தி புல்லுண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலமாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலயம் விளங்குகின்றது. கிழக்கு மாகாணத்தின் தேரோடும் ஆலயம் என்னும் பெருமையினையும் கொண்டதாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் விளங்கிவருகின்றது.

வருடாந்த உற்சவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 4மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய வருடாந்த உற்சவத்தில் எதிர்வரும் 18-09-2016,ஞாயிறு பிற்பகல் 4.00மணிக்கு தேரோட்டப்பெருவிழாவும் அன்றிரவு 8,மணிக்கு திருவேட்டைவிழா என்பன சிறப்புற நடைபெறவுள்ளது.

தேரோட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல நூறாண்டு பழைமைவாய்ந்த மரச்சில்லுகளால் உருவாக்கப்பட்ட இரண்டு தேர்கள்முறையே வினாயகர்தேர், சித்திரத்தேர்வடம்பூட்டி ஆண் அடியார்களால் மட்டும் ஆலயவெளிவீதியில் முற்றும் மணல் தரையில் மிகவும் பக்திபூர்வமாக இழுக்கப்படும். இது எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

கொக்கட்டிச்சோலை ஸ்ரீரீ தான்தோன்றீஷ்வரர் கோயில் தேரோட்ட விழா பழமையான தமிழர்பாரம்பரியபண்பாடுகளை பிரதிபலிக்கும் மஹோற்சவப் பெருவிழா என்பது நோக்கத்தக்கது.

இன்று காலை விசேட பூஜைகளுடன் வசந்த மண்டப பூஜை நடைபெற்று கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் இந்த மஹோற்சவம் ஆரம்பமானது.

பாரம்பரிய நடைமுறைகளினைக்கொண்டு நடைபெறும் இந்த கொடியேற்றத்தின்போது நெற் கதிர்கள் கொடிக்கையிறாக திரிக்கப்பட்டு கொடியேற்றம் நடாத்தப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.