மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு பிரதேசசபைகளை தரமுயர்த்துவதற்கான பிரேரணை கிழக்கு மாகாணசபையில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண்முனை தென் எருவில் பற்று மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைகளை நகர சபைகளாக தரமுயர்த்துவதற்கான தனிநபர் பிரேரணையை நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபை அமர்வில் கொண்டுவரவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று தேர்தல் தொகுதிகள் இருக்கின்றன.அவற்றில் மட்டக்களப்பு தொகுதியில் ஒரு மாநகரசபையும் இரண்டு நகரசபைகளும் உள்ளன.

கிழக்கு மாகாணத்தில் ஒரேயொரு தமிழ் தொகுதியாக கருதப்படும் பட்டிருப்பு தொகுதியில் மூன்று பிரதேச சபைகளைக்கொண்டுள்ளது.அதில் மண்முனை தென் எருவில் பற்று மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியை உள்ளடக்கியுள்ள காரணத்தினாலும் அதிகளவு மக்கள் தொகை,ஆதார வைத்தியசாலை உட்பட அரச அலுவலகங்கள்,பிரதான நிறுவனங்கள்,வங்கிகள் உட்பட பல்வேறு நிறுவனங்களைக்கொண்டிருப்பதன் காரணமாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை நகரசபையாக தரமுயர்த்தப்படவேண்டும்.

அதுபோன்று கல்குடா தொகுதியில் உள்ள பிரதேச சபைகளில் கூடுதலான சனத்தொகையினையும் பெரிய பிரதேசசபையினைக்கொண்டதாகவும் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை விளங்கிவருகின்றது.இதனையும் நகரசபையாக தரமுயர்த்தப்படவேண்டும் என்ற தனிநபர் தீர்மானத்தினை நாளை முன்வைக்கவுள்ளேன்.

இந்த தீர்மானத்தினை நிறைவேற்றி அதனை மத்திய உள்நாட்டு மாகாணசபைகள் அமைச்சின் சிபாரிசுக்கு அனுப்புமாறு கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.