மட்டு.புதுக்குடியிருப்பு 26வது படுகொலை நினைவு தினம் அனுஸ்டிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலையின் நினைவு தினம் இன்று புதன்கிழமை காலை அனுஸ்டிக்கப்பட்டது.

இன்று புதன்கிழமை காலை புதுக்குடியிருப்பு சித்திவிநாயகர் ஆலயத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக விசேட வழிபாடுகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து புதுக்குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி அருகே நினைவு தின நிகழ்வுகள் நடைபெற்றன.

புதுக்குடியிருப்பு கிராமத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், மா.நடராஜா, ஞா.கிருஸ்ணபிள்ளை, இரா.துரைரெட்னம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நினைவுத்தூபிக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செய்யப்பட்டதுடன் மலரஞ்சலியும் செய்யப்பட்டது.

புதுக்குடியிருப்பில் 1990ஆம் ஆண்டு 09 மாதம் 21ஆம் திகதி இரவு கடற்கரை வழியாக புகுந்த முஸ்லிம் ஊர்காவல் படையினர் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக பெண்கள்,வயோதிபர்கள் உட்பட 17பேர் படுகொலைசெய்யப்பட்டுள்ளதுடன் 28க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை புதுக்குடியிருப்பு நினைவு தினத்தினை முன்னிட்டு புதுக்குடியிருப்பு மக்களினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இரத்ததான முகாம் ஒன்றும் இன்று காலை புதுக்குடியிருப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் கிராம பொதுமக்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.