மட்டக்களப்பை நெருங்குகின்றது அபாயம்…….சிந்திப்போம் செயற்படுவோம்….

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலத்தின் அடியில் உள்ள ஊற்று நீர் மாசடைந்துவருவதன் காரணமாக எதிர்வரும் 25 ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீரை பயன்படுத்தமுடியாத அபாய நிலை தோன்றியுள்ளதாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தில் இன்று புதன்கிழமை காலை குழாய் மூலமான குடிநீர் விநியோகத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த குடிநீர்ப்பிரச்சினை அப்பகுதியில் உள்ள நலன்விரும்பிகளின் உதவியுடன் நிவர்த்திசெய்யப்பட்டுள்ளது.

மூன்று வர்த்தகர்கள் இணைந்து மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தில் குழாய் நீர் மூலமான குடிநீர் திட்டத்தினை அமைத்துள்ளனர்.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வும் மாணவர்களுக்கு சின்னஞ்சூட்டும் நிகழ்வும் இன்று புதன்கிழமை காலை பாடசாலை அதிபர் வி.முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன் பிரதம அதிதியாகவும் மட்டக்களப்பு கல்வி வலய சேவைக்கால ஆலோசகர் ஜி.கிருஸ்ணமூர்த்தி சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டனர்.

அத்துடன் வர்த்தக முகாமையாளர் கே.திருச்செல்வம்,குமரன் ஸ்ரோர் உரிமையாளர்,கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கே.தவராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பாடசாலைகளுக்கும் அதன் கல்வி வளர்ச்சிக்கும் பல்வேறு வழிகளிலும் உதவி வருவோர் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர் தலைவர்களுக்கான சின்னஞ்சூட்டும் நிகழ்வும் நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய கோட்டக்கல்வி பணிப்பாளர்,

இன்று உலகளாவிய ரீதியில் நீர்தட்டுப்பாடு ஏற்பட்டுவருகின்றது.இந்த நீர்தட்டுப்பாடு மிகவும் உச்சநிலையினை அடைந்துள்ளது.இந்த நீரினால் நாடுகளுக்குள் கூட பிரச்சினைகள் ஏற்படுவதை காணமுடிகின்றது.அண்மையில் இந்தியாவில் கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டுக்கு இடையிலான மோதல்களும் இந்த நீரினாலேயே ஏற்பட்டுள்ள.
அதேபோன்று இலங்கையிலும் பாரிய நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டுவருவதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலத்தின் அடியில் காணப்படும் ஊற்று நீர் மாசடைந்துவருவதாக பல ஆய்வுகள் எங்களிடம் முன்வைக்கப்படுகின்றது.இன்னும் 25 வருடகாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நீரை அருந்தமுடியாது என்ற அபாயரமான எச்சரிக்கையும் இந்த ஆராய்ச்சிகள் மூலமாக எங்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

எமது பகுதி சுனாமியினால் பாதிக்கப்பட்ட பகுதியாகும்.இந்த சுனாமி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட இந்த அடிநீர் சரியான கட்டமைப்புக்கு இன்னும் வரவில்லையென கூறப்படுகின்றது.

எனவேதான் சுத்தமான நீர் எமக்கு மிகவும் முக்கியமானது.நாங்கள் கொதித்தாறிய நீரினையே குடிநீராக பயன்படுத்தவேண்டும்.இதனை ஒவ்வொருவரும் தமது கடமையாககொள்ளவேண்டும்.கொதித்தாறிய நீரை பருகாததன் காரணமாகவே இன்று பல்வேறு நோயினால் பாதிக்கப்படுகின்றனர் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.

நீர் இன்று பற்றாக்குறையான நிலைமை ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த மாணவர் காலத்தில் இருந்தே நீரினை சிக்கனமாக பாவிக்கும் பழக்கத்தினை மாணவர்கள் கைக்கொள்ளவேண்டும்.