மட்டக்களப்பு மேற்கு வலயத்தினை உருவாக்குவதில் பாரிய பங்கு பிள்ளையானுக்குள்ளது - ஸ்ரீநேசன் எம்.பி.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினை உருவாக்குவதில் பாரிய பங்கை முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் ஆற்றியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
உண்மைகள் சிலருக்கு கசக்கும் என்றாலும் உண்மையினை மறைக்ககூடாது என்பது எனது அடிப்படைவாதம் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள “மேற்கு ஒளி” சஞ்சிகையின் வெளியீட்டு விழா நேற்று வியாழக்கிழமை மாலை குறிஞ்சாமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலய கல்விப்பணிப்பாளர் எஸ்.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தாண்டாயுதபாணி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

அதிவிசேட அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கலந்துகொண்டதுடன் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.துரைரெட்னம்,ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோர் கலந்துகொண்டனர்.

படுவான்கரை பகுதியை மையப்படுத்தி 2010ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயமானது ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

இந்த நிலையில் குறித்த கல்வி வலயத்தின் உருவாக்கம் அதன் செயற்பாடுகள்,படுவான்கரை பிரதேசத்தின் கல்வி செயற்பாடுகள்,பிரதேசத்தின் நிலவரங்களை தாங்கியவாறு இந்த சஞ்சிகை உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினை அமைப்பது தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசியிருந்தனர்.இருந்தாலும் உண்மையினை மறைக்ககூடாது என்ற அடிப்படையில் இந்த வலயம் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்கள் பாரிய பங்களிப்பினை வழங்கினார்.

சிலவேளைகளில் உண்மைகள் கசப்பானதாக இருந்தாலும் உண்மைகள் மறைக்கப்படக்கூடாது என்பது எனது அடிப்படையான வாதம் ஆகும்.இந்த வலயத்தினை உருவாக்குவது தொடர்பான முன்னெடுப்புகளை எமது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்னெடுத்திருந்தாலும் சந்திகாந்தன் அதனை உருவாக்குவதில் பாரிய பங்களிப்பினை செய்தார் என்பதை யாரும் மறைக்கவும்முடியாது.மறக்கவும் முடியாது.அவர் வேறு கட்சியினை சார்ந்தவராக இருந்தாலும் உண்மையென்பதை வெளிப்படையாக சொல்லவேண்டும்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் ஆரம்பிக்கப்பட்டபோது சிறந்த நிறுவாக கட்டமைப்பு இருந்ததன் காரணமாக அதனை படிப்படியாக உயர்நிலைக்கு கொண்டுசெல்லும் சந்தர்ப்பம் இருந்தது.

சீனாவின் துயரம் குவாங்கோ நதியென்றால் மட்டக்களப்பின் துயராக இந்த மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் உள்ளது.இந்த வலயம் கஸ்ட அதிகஸ்ட பாடசாலைகளை உள்ளடக்கியுள்ளது.இந்த பிரதேசத்தில் கல்வியில் எழுச்சி ஏற்படும்போதே அது ஒட்டுமொத்த மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி உயர்ச்சியை காட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது.