வவுணதீவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை விவசாய திட்ட பகுதிக்குட்பட்ட விவசாய அமைப்புகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை வவுணதீவு பிரதேச செயலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று மட்டக்களப்பு மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் பெரும்போக விவசாய செய்கை தொடர்பான ஆரம்பக்கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் விவசாயிகளினால் நடாத்தப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளினால் தங்களுக்கு வழங்கப்படும் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுவதில்லையென தெரிவித்துள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் விவசாய கூட்டத்தினை நடாத்த அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

இதன்போது அதிகாரிகள் அரசியல்வாதிகள் விவசாய பெரும்போக நெற்செய்கை கூட்டத்திற்கு வருகைதந்தபோதிலும் விவசாயிகள் கூட்டத்திற்கு செல்லாத காரணத்தினால் கூட்டம் நடாத்தமுடியாத நிலைமையேற்பட்டது.

பல காலமாக நெல் கொள்வனவு மற்றும் பசளை மானியங்கள் பெறுவதில் உள்ள தடங்கல்,சட்ட விரோத மண் அகழ்வு,கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைப்பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவந்த நிலையில்இதுவரையில் எந்தவித கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லையெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.அத்துடன் விவசாய கூட்டத்திற்கான திகதி மாற்றப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் உhயி திகதிக்கு கூட்டம் நடாத்தப்படாமையினால் தமது செய்கை காலம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

பெரும்போக விவசாய கூட்டத்திற்கு வருகைதந்த கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் மற்றும் சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியபோதிலும் தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில்கள் வழங்கப்படாமல் நடாத்தப்படும் விவசாய கூட்டங்களுக்கு விவசாயிகள் சமூகமளிக்கமாட்டார்கள் என தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து வவுணதீவு பிரதேச செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் விசேட கூட்டம் நடாத்தப்பட்டது.

இதில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் மற்றும் சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், ஞா.கிருஸ்ணபிள்ளை,மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் என்.சிவலிங்கம்,மட்டக்களப்பு மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி எதிர்வரும் 03ஆம் திகதி திங்கட்கிழமை பெரும்போக விவசாய கூட்டத்தினை நடாத்துவதாகவும் அன்றைய தினம் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுப்பதாக மேலதிக அரசாங்க அதிபர் வழங்கிய உறுதிமொழியை அடுத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டனர்.