மட்டக்களப்பில் நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி

இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க முற்படுவது தவிர்க்கப்பட வேண்டும்   என  காணாமல் போனவர்களின் உறவுகளிடமிருந்து கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் அமர்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

நல்லிணக்க பொறிமுறை பற்றிய மக்கள் கருத்தறியும் செயலணியின் மட்டக்களப்பு மாவட்ட குழுவின் செயலாளர் ஏ.காண்டீபன் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில், காணாமல் போன, கடத்தப்பட்டவர்களின் உறவினர்களின் குடும்ப உறவினர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகள் பொதுநிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் பெண் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்ததுடன், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

இந்த செயலணியின் அமர்வு மட்டக்களப்ப மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை பிரதேச செயலக மண்டபத்திலும் வெள்ளிக்கிழமை களுவாஞ்சிகுடி பிரதேச செயலக மண்டபத்திலும் நடைபெற்றது.

வாழைச்சேனையிலும் களுவாஞ்சிகுடியிலும் 441 பேர் தமது கருத்துக்களை ஆலோசனைகளை இந்த செயலணியில் முன்வைத்ததாக செயலணி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.