ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஆதரவாக முஸ்லிம்களை ஒன்றுதிரளுமாறு ;.ஹிஸ்புல்லாஹ் அழைப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு சமூகம் - பிரதேசம் சார்ந்த கட்சியல்ல அது முஸ்லிம்களுக்கும் சொந்தம் எனத்தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இக்கட்சியைப் பலப்படுத்த்தி கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக எதிர்வரும் 4ஆம் திகதி குருநாகலையில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டுக்கு அதிகளவு முஸ்லிம்கள் பங்கேற்க வேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார்.

அவர் இன்று புதன்கிழமை இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-

கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முஸ்லிம்களுக்கு அதிகம் சேவைகளை செய்த கட்சி என்ற வகையில் அதனைப் பலப்படுத்துவதில் முஸ்லிம்களும் அதிகம் பங்களிப்புச் செய்ய வேண்டும்.

முஸ்லிம்களது உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசில் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை  எமக்கு இருக்கின்றது. நாங்கள் பல வருடங்களாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வினை இந்த அரசின் கீழ் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் ஜனாதிபதியின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும்.
அந்தவகையில் 65ஆவது ஆண்டு விழாவில் அதிகமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு முஸ்லிம்கள் தொடர்பான நல்லபிப்பராயத்தை ஜனாதிபதி மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம்களுக்கும் சொந்தமான கட்சி என்பதை நாங்கள் அடையாளப்படுத்த வேண்டும். பெரும் தலைவர் டாக்டர். பதியுதீன் மஹ்மூத்; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கும் காலத்தில் முஸ்லிம்கள் அதிகம் இக்கட்சிக்கு ஆதரவளித்தனர். இதனால் அவர் சு.க. ஊடாக முஸ்லிம்களுக்கு அதிக சேவை செய்தார்.

எனவே, தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சிறுபான்மை சமூகத்துக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, முஸ்லிம்களது உரிமைகளை இக்கட்சியின் ஊடாக பெற்றுக் கொள்வதற்கு ஜனாதிபதிக்கு பக்கபலமாக முஸ்லிம்கள் இருக்க வேண்டும் - எனத்தெரிவித்தார்.