பிரசாந்தன் பிணையில் விடுதலை

மட்டக்களப்பு ஆரையம்பதி இரட்டை கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் இன்று புதன்கிழமை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வி.சந்திரமணி முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை தலா 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், இவ்விரு சரீரப் பிணைகளிலும் செல்லவும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளுமிடத்து அவரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறும் நீதிவான் நீதிமன்றுக்கு அனுமதியளித்திருந்தார்.

அத்துடன், பிணை நிபந்தனைகளாக அடுத்து வரும் 6 மாதங்களுக்கு வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களும் காலை 9 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் காத்தான்குடி பொலிஸ் நிலையம் சென்று கையொப்பமிட வேண்டும்.

இதற்கும் மேலதிகமாக இவர்கள் வழக்கு விசாரணை முடியும் வரை நாட்டைக் கடந்து வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாதென்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.அத்தடன் வெளிமாவட்டங்களுக்கு செல்வது என்றாலும் மேல் நீதிமன்ற அனுமதிபெற்றே செல்லவேண்டும்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோததர் ஆகியோருக்கு பிணை வழங்குவதற்கான அனுமதியை வழங்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான  சகல ஆவணங்கள்  நீதிவான் நீதிமன்றுக்கு சமர்பிக்கப்பட்டதை தொடர்ந்து இருவரும்  பிணையில் இன்று விடுதலை செய்யப்பட்டனர் .

கடந்த 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதி மட்டக்களப்பு, ஆரையம்பதிப் பகுதியில் இரண்டு பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் பூ. ஹரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.