கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உள்ளீர்க்கப்படாத 26பேரை உள்ளீர்க்குமாறு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் உள்ளீர்க்கப்படாத 26 மாணவர்களை உள்ளீர்க்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை தாக்கல்செய்யப்பட்ட மனுவினை ஆராய்ந்த மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.பி.முகைதீன் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

2009-2010ஆம் கல்வி ஆண்டில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் விபுலானந்தா அழகியல் கற்கைககள் நிறுவகத்தில் 220 மாணவர்கள் கற்கைகளை பூர்த்திசெய்துள்ளனர்.

இவர்களுக்கான பட்டமளிப்புவிழா எதிர்வரும் 10-09-2016கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள நிலையில் இவற்றில் 40 மாணவர்கள் சகல விடயங்களையும் பூர்த்திசெய்துள்ள நிலையில் பொதுபட்டமளிப்பு விழாவில் அனுமதிக்கப்படவில்லை.

இதனடிப்படையில் 26 மாணவர்கள் தங்களை பட்டமளிப்பு விழாவில் இணைத்துக்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல்செய்தனர்.

மாணவர்களின் சார்பில் சட்டத்தரணிகளான பி.சந்தியா மற்றும் ரொசானி முத்துக்கல ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைய பிரபல சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் மன்றில் ஆஜராகி மாணவர்களின் கோரிக்கை சமர்ப்பணத்தினை மன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதனை சமர்ப்பணத்தினை கவனத்தில்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.பி.முகைதீன் எதிர்வரும் 10ஆம்திகதி நடைபெறவுள்ள பொதுபட்டமளிப்பு விழாவில் குறித்த 26 மாணவர்களையும் அனுமதிக்குமாறு கட்டாய கட்டளையினை பிறப்பித்துள்ளார்.