திருப்பழுகாமம் மாவேற்குடா அருள்மிகு ஸ்ரீ பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு திருப்பழுகாமம் மாவேற்குடா அருள்மிகு ஸ்ரீ பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தட்சணகைலாயம் எனப்போற்றப்படும் கிழக்கு மாகாணத்தில் நீண்ட கால வரலாற்று சிறப்பினைக்கொண்டதாக திருப்பழுகாமம் மாவேற்குடா அருள்மிகு ஸ்ரீ பிள்ளையார் ஆலயம் இருந்துவருகின்றது.

இன்று காலை விசேட பூஜைகள் நடைபெற்று யாகம் மற்றும் கொடிச்சீலைக்கு விசேட பூஜைகளும் நடைபெற்று கொடிச்சீலை தம்பத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

கொடித்தம்பம் அருகில் விசேட பூஜைகள் நடைபெற்று துவஜாரோகன மஹோற்சவ கொடியேற்றம் ஆயிரக்கணக்கான அடியார்களின் ஆரோகரா கோசத்துடன் வேதபராயணம் முழங்க நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து தம்பத்திற்கு அபிசேகம் நடைபெற்றதுடன் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

கொடியேற்றத்தினை தொடர்ந்து அடியார்களுக்கு ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றதுடன் சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.

எதிர்வரும் ஐந்தாம் திகதி ஆலயத்தின் தேர்த்திருவிழா நடைபெறவுள்ளதுடன் மறுதினம் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.