2016ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண இலக்கிய விழா மட்டக்களப்பில்

2016ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் ஆராயும் கூட்டம் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை உட்பட கல்வி  அமைச்சின் செயலாளர் மற்றும் மாவட்ட,பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள்,எழுத்தாளர்கள்,கலை இலக்கிய வாதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது தமிழ் இலக்கிய விழாவினை சிறப்பான முறையில் நடாத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் ஒவ்வொரு நிகழ்வினையும் மேற்கொள்ளும் வகையில் குழுக்களும் நியமனம் செய்யப்பட்டது.

இதன்போது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரையில் மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் இதில் ஆராயப்பட்டதாக கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் தெரிவித்தார்.

இந்த நிகழ்வானது கலாசார பவனி நிகழ்வுடன் ஆரம்பமாகவுள்ளதுடன் பல்வேறு கலாசார நிகழ்வுகள் கௌரவிப்பு நிகழ்வுகள் உட்பட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 12 Nபுர் வித்தகர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்படவுள்ளர்.கலைத்துறையில் சேவையாற்றிவரும் 60வயதை பூர்த்திசெய்தவர்கள் இந்த விருதுகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு இளம் கலைஞர்கள் விருது அறிமுகம் செய்யப்படவுள்ளது.அதற்கு இளைஞர்களிடம் இருந்து நல்லவரவேற்பு கிடைத்துள்ளது.எத்தனைபேர் கௌரவிக்கப்படவுள்ளனர் என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லையெனவும் மாகாண பணிப்பாளர் தெரிவித்தார்.







இலக்கிய நூல்களுக்கான பரிசுகள் 12பேருக்கும் இதன்போது வழங்கப்படவுள்ளதுடன் அரச ஊழியர்கள் மத்தியிலும் போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அதில்வெற்றிபெறுபவர்களுக்கும் இதன்போது பரிசுகள் வழங்கப்படவுள்ளது.