கிழக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறையை நவீனமயப்படுத்த நிதியில்லை –கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி

கிழக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறையினை நவீன மயப்படுத்துவதற்கான நிதிவசதிகள் போதியளவில் வழங்கப்படுவதில்லையென கிழக்கு மாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
கிழக்கு மாகாண விளையாட்டு விழாவின் இறுதி விளையாட்டு போட்டிகள் நேற்று தொடக்கம் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவந்தன.

இந்த நிலையில் இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வெபர் மைதானத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,சுகாதார அமைச்சர் நசீர்,காணி அமைச்சர் ஆரியவதி கலபதி,மாகாண தவிசாளர் சந்திரதாச கலபதி,பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், மா.நடராஜா, இரா.துரைரெட்னம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இறுதி போட்டிகள் சில நடைபெற்றதுடன் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

கிழக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறையினை நவீன மயப்படுத்த தேவையான நிதிகளை மத்திய அரசாங்கத்திடம் இருந்துபெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை கிழக்கு முதலமைச்சர் மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் இங்கு கோரிக்கை விடுத்தார்.