ஏறாவூரில் வீடு உடைக்கப்பட்டு நகைகள் பணம் கொள்ளை

மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பொலிஸ் பிரிவு, ஏறாவூர் நகர் போக்கர் வீதியிலுள்ள வீடொன்றில் செவ்வாய்க்கிழமை (ஜுலை 05, 2016) அதிகாலையில் வீடு புகுந்து நகைகளும் பணமும் திருடப்பட்டுள்ளது பற்றி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தின்போது தன்வசமிருந்த சுமார் 2 இலட்ச ரூபாவுக்கு மேற்பட்ட நகைகளும் ஆயிரம் ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் தமீம் தௌபீக்கா (வயது 32) தெரிவித்தார்.

இச்சம்பவம்பற்றி அவர் மேலும் கூறியதாவது, திங்கட்கிழமை நள்ளிரவு றமழான் நோன்புகால வணக்கவழிபாடுகளை முடித்து விட்டு வீட்டார் அனைவரும் நடுநிசியைத் தாண்டி அதிகாலை ஒரு மணியளவில் நித்திரைக்குச் சென்று விட்டோம்.

வழமைபோன்று நோன்பு அனுஷ்டிப்பதற்காக அதிகாலை 4 மணிக்கு எழுந்து பார்த்தபோது இரண்டு அலுமாரிகள் திறந்து காணப்பட்டதோடு அலுமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த உடுதுணிகள் உட்பட பொருட்கள் யாவும் சிதறிக் கிடந்தன.

கைப்பைகள் வாசலுக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டு அங்குமிங்கும் போடப்பட்டிருந்தன.

இதன்போது அலுமாரிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்களான கழுத்தொட்டி, செயின் ஜிப்ஸ், மோதிரங்கள் உள்ளிட்ட சுமார்  இரண்டு இலட்ச ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியுடைய நகைகளும் ஆயிரம் ரூபாய் பணமும் திருடப்பட்டிருந்ததை அறியமுடிகின்றது” என்றார்.

“திருடர்கள் வீட்டுக்குள்ளேயே நீண்ட நேரம் ஆறஅமர இருந்து பொருட்களை ஒவ்வொன்றாக பரிசோதித்து தங்க நகைகளை திருடியுள்ளனர். இதன்போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த எமக்கு ஏதாவது மயக்க மருந்து தெளித்திருந்தார்களா என்பது பற்றிய ஐயம் இருப்பதாகவும்” தௌபீக்கா குறிப்பிட்டார்.

திருடர்கள் ஆளரவம் இல்லாமல் மதிலால் பாய்ந்து வந்து வீட்டுக்கதவுளைத் திறந்து நன்கு பரிசோதித்து திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இந்த வீதியின் மறுபக்கத்திலுள்ள வீடொன்றிலிருந்த அலவாங்கு ஒன்றையும் எடுத்து வந்து வீட்டுக் கதவுகளைத் திறக்க திருடர்கள் பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்திருப்பதாக பொலிஸார் கூறினர்.

இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸாரும் மட்டக்களப்பு குற்ற தடயவியல் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.