கைமாறியது மட்டக்களப்பு விமான நிலையம்

விமானப்படை கட்டுப்பாட்டிலிருந்த மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
குறித்த விமான நிலையத்தின் செயற்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகளை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை பொறுப்பேற்றுள்ளது.

இது குறித்த கடந்த மே மாதம் 31ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், சிவில் விமானப் போக்குவரத்தை அபிவிருத்தி செய்யவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த விமான நிலையத்தின் ஓடுபாதை, 1400 மில்லியன் ரூபா செலவில் புரமைக்கப்பட்டுள்ளது.

விமானப்படையின் உதவியுடன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மட்டக்களப்பு விமான நிலையத்தில் இருந்து எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் விமான சேவைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க, மத்தல உள்ளிட்ட16 விமான நிலையங்களில், 4 விமான நிலையங்கள் மாத்திரமே, தமது கட்டுப்பாட்டில் இருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நிமலசிறி தெரிவித்துள்ளார்.

ஏனைய 12 விமான நிலையங்களும், விமானப்படையின் கட்டுப்பாட்டிலேயே இயங்குவதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த விமான நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் சந்திம அல்விஸ் தெரிவித்துள்ளார்.

எனினும், விமான நிலைய சுற்றாடலின் பாதுகாப்பு விமானப்படை வசமே இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.