முக்கொலை சந்தேக நபரை 48 மணி நேரம் தடுத்துவைத்து விசாரணை செய்ய அனுமதி

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் பச்சிளங்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரை அடுத்து வரும் 48 மணிநேரங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பில் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவை களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம். றிஸ்வி திங்களன்று (ஜுலை 25, 2016) பிறப்பித்தார்.
படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவனான பிரசாந்தன் (வயது 34) என்ற சந்தேக நபரே கிராம மக்கள் அளித்த வாக்குமூலத்தின்படி பொலிஸாரால் படுகொலை இடம்பெற்ற ஞாயிறன்று சில மணிநேரங்களுக்குப் பின்னர்  கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சந்தேக நபரை திங்களன்று களுவாஞ்சிக்குடி பொலிஸார் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம். றிஸ்வி முன்னிலையில் ஆஜர் செய்தபோது சந்தேக நபரை 48 மணிநேரம் பொலிஸ் பாதுகாப்பில் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காக்காச்சிவெட்டைக் கிராமத்தைச் சேர்ந்த பேரின்பம் விஜித்தா (வயது 24), பிரசாந்தன் சஸ்னிகா (வயது 18 மாதங்கள்) மற்றும் கந்தையா பேரின்பம் (வயது 56) ஆகியோரே படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.