“ஆச்சி முத்துமாரி “ பக்தி பாடல்கள் அடங்கிய இசை இறுவெட்டு வெளியீட்டு (VIDEO & PHOTOS)

(லியோன் )

மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய “ஆச்சி முத்துமாரி “ பக்தி பாடல்கள் இசை இறுவெட்டு வெளியீட்டு விழா ஆலய மண்டபத்தில்   இடம்பெற்றது .


 மட்டக்களப்பு   கல்லடி முகத்துவாரம் மகேஸ்பரராஜா தினேஷ்ராஜ் தயாரிப்பில்  ஸ்ரீ முத்துமாரியம்மன்  ஆலய  பாரிபாளன சபையினால் ஆலய கும்பாபிஷேக நிகழ்வினை முன்னிட்டு நிதி சேர்க்கும் முகமாக  “ஆச்சி முத்துமாரி “எனும்  பக்தி  பாடல்கள் அடங்கிய   இசை இறுவெட்டு வெளியீட்டு  வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்  வி தவராஜா கலந்துகொண்டு இறுவெட்டினை வெளியிட்டு வைத்தார் .

இந்த இறுவெட்டு வெளியீட்டு விழாவில் உரையாற்றிய மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்  வி தவராஜா தெரிவிக்கையில்  அம்மன் வழிபாடு என்பது மட்டக்களப்பு சமுதாயத்தினுடைய நெருக்கமான நமக்கே சொந்தமான  ஒரு  வழிபாடுதான் அம்மன் வழிபாடாகும் .

மட்டக்களப்பாருக்குரிய சொந்தமான வழிபாடுகளில் அம்மனும் அதோடு இணைந்த வைரவர் வழிபாடாகும் .

கிராம புறங்களிலே அம்மன் வழிபாடு என்பது ஆண்டுக்கு ஒரு தடவை வீட்டிலே நாங்கள் வழிபடுகின்ற  முறை இருக்கின்றது .

இன்றைய நவீன ஓட்டத்திலே அது சற்று குறைவடைந்து வந்தாலும் இன்னும் கிராமத்தவர்கள் அதனை பேணிக்கொண்டு வருகிறார்கள் . 

அங்கே அம்மன் வழிபாடு நடக்கின்ற பொழுது அம்மன் நேரடியாக வந்து எங்களுக்கு அருள் பாலிப்பாள் . அங்கே அம்மனாக கலைகொண்டு ஆடுபவர் நமது உறவு முறைகளில் ஒருவராக  வந்து அருளை கூறி அடங்குவார் .

அதே போன்று தான் வைரவரை எமது காவல் தெய்வமாக வைத்திருக்கின்றோம்.

இவ்வாறு இறுக்கமாகவும் ,சுதந்திரமாகவும் , நெருக்கமாகவும் இருக்கும் அம்மன் வழிபாட்டு முறை அண்மைய காலங்களில் சற்று மாறுபட்டு வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது .

 சடங்கு கோயில்கள் எல்லாம்  நித்திய பூஜைகள் நடக்கின்ற கோயில்களாக மாறிக்கொண்டு வருகின்றது .

சடங்கு வழிபாட்டுக்கு இருக்கின்ற தனி தன்மை மாறுபட்டு விடுமோ என்கின்ற ஆபத்தும் எமக்குள் இருக்கின்றது .

ஆனால் இந்த ஆலய வழிபாடுகள் ஆண்டு தோறும் சடங்குகளை நடாத்தி சிறப்பாக செய்து வருகின்றார்கள் .

அதேபோன்று  இந்த ஆலயத்தின்  கும்பாபிஷேகம்  நிகழ்வுக்காக  நிதியினை  பெற்றுக்கொள்ளும் நோக்குடன்  “ஆச்சி முத்துமாரி “ எனும் பக்தி  பாடல்கள் அடங்கிய  இறுவெட்டு  வெளியிடப்படுகின்றது .

இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகத்திற்காக நிதி சேகரிப்பது போல் இந்த கிராமத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்விக்கும் உதவிகளை செய்யுமாறும் இந்த இறுவெட்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தெரிவித்துக்கொண்டார் .

இந்த இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வில் கல்லடி முகத்துவாரம் ஸ்ரீ முத்துமாரியம்மன்  ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் , ஆலய பக்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .